WTC Final Tamil News: இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் கடந்த 18-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் 4 நாட்களில் 2 நாள் ஆட்டம் மழையால் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. நேற்று 6-வது நாளில் போட்டி முடிவுக்கு வந்த நிலையில், 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது.
தொடர் மழைக்கு மத்தியில் நடந்த இந்த போட்டி நிச்சயம் டிராவில் முடிவடையும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சால் 2 வது இன்னிங்ஸில் 170 ரன்னில் இந்திய அணி சுருண்டது. தொடர்ந்து களம் கண்ட நியூசிலாந்து அணியோ 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியின் இந்த தோல்வி ரசிகர்களிடையே கடும் அதிருப்பியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மிக எளிதாக டிரா செய்ய வேண்டிய போட்டியை இந்திய அணி ஏன் கோட்டை விட்டது என்பது போன்ற பல தரப்பட்ட கேள்விகள் சமூக தள பக்கங்களில் உலா வருகின்றன.
அதே வேளையில் கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி ஐசிசி நடத்திய உலகளவிய போட்டிகளில் இதுவரை எந்த கோப்பையையும் வெல்லவில்லை என்ற விமர்சனங்களும் முன் வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், "போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக தடைபட்டது. அதன் பின்னர் 2வது நாளில் ஆட்டம் தொடங்கியபோது நாங்கள் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இருந்துதோம். ஆனால் வானிலை காரணமாக அவ்வப்போது ஆட்டம் பாதிக்கப்பட்டதால் எங்களால் விரைவாக ரன்களை சேர்க்க முடியவில்லை. போட்டி முழுவதுமாக நடந்து இருந்தால் நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்திருப்போம்.
இதுபோன்ற மைதானங்களில் சிறப்பாக செயல்பட இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் அவசியம். இருப்பினும் இப்போது இருக்கும் அணியை வைத்து நாங்கள் பல்வேறு நாடுகளில் வெற்றி பெற்று இருக்கிறோம். அதனால் எங்களுடைய பேட்டிங்கின் பலமும் அதிகரித்திருக்கிறது. 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது சரியான முடிவுதான்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.