WTC Final Tamil News: இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 217 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது. தொடர்ந்து களம் கண்ட நியூசிலாந்து அணி 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் சேர்ந்திருந்து.
4ம் நாள் ஆட்டம் மழையின் குறுக்கிட்டதால் கைவிடப்பட்ட நிலையில், நேற்று 5ம் நாள் ஆட்டமும் மழை காரணமாக தாமதமானது. தொடர்த்து களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியவில்லை. இதனால் சொற்ப ரன்னில் அந்த அணியின் வீரர்கள் வெளியேறினர். எனவே முதல் இன்னிங்ஸின் முடிவில் 249 ரன்களை அந்த அணி சேர்த்தது. தற்போது களமிறங்கியுள்ள இந்திய அணி அதன் 2வது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இது ஒரு புறம் இருக்க, டெஸ்ட் போட்டிகளிலும், அவை நடக்கும் மைதானங்களிலும் பல சுவாரஸ்யமான மற்றும் அதிர்ச்சியான சம்பவங்களுக்கு எப்போதுமே பஞ்சமிருக்காது. அந்த வகையில் போட்டியின் 100வது ஓவர் வீசப்பட்ட போது அதிர்ச்சி கலந்த சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
இந்த ஓவரை இந்திய அணியின் ஆல்- ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா வீசினார். ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட நியூஸிலாந்தின் டிம் சவுதி பந்தை பவுண்டரி கோட்டிற்கு மேலே பறக்க விட்டார். 6 ரன்களை சேர்த்த அந்த பந்து அங்கு ஜாலியாக ஆட்டத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ரசிகரின் முகத்தை பதம் பார்த்தது. இந்த சம்பவத்தில் அவரின் முகக் கண்ணாடிக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது.
ஆறுதல் தரும் விடயமாக அந்த ரசிகர் லேசான காயத்தோடு தப்பினார். சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, தற்போது இணைய பக்கங்களிலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“