WTC Final qualification scenario in tamil: நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று (9ம் தேதி) முதல் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை முதல் இன்னிங்சில் 355 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடி வரும் நியூசிலாந்து அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை அணி நியூசிலாந்தை விட 193 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: யாருக்கு வாய்ப்பு?
இந்நிலையில், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழையும் அணிகளுக்கான போட்டியில் கடும் போட்டியாளராக இலங்கை அணி மாறியுள்ளது. இந்தியாவில் நடக்கும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் 3வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் அந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஏற்கனவே இத்தொடரில் நடந்த 2 போட்டிகளில் இந்தியா வென்ற நிலையில், இறுதிப் போட்டிக்குள் நுழைவதில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால், இந்தூர் டெஸ்ட் தோல்வி இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதால், தற்போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் போட்டி நிலவும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
நெருக்கடியில் இந்தியா
இதனிடையே, நேற்று முதல் அகமதாபாத்தில் தொடங்கிய இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்துள்ளது. 2வது ஆட்ட நாள் நேர முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்துள்ளது. இதனால், ஆஸ்திரேலியா 444 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தரவரிசையில் 68.52 சதவீத புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. 60.29 சதவீத புள்ளிகளுடன் இந்தியா 2வது இடத்திலும், 53.33 சதவீத புள்ளிகளுடன் இலங்கை அணி 3வது இடத்திலும் உள்ளன. தற்போது இது இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்தியாஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழையுமா? அல்லது அதன் நிலை என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பதில் பலரும் உள்ளனர்.
மறுபுறம் இலங்கை அணி நியூசிலாந்து மண்ணில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தொடரின் தொடக்க ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றால், அவர்களின் சதவீத புள்ளிகள் 57.58 ஆக உயரும். எவ்வாறாயினும், இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற இலங்கைக்கு, அவர்கள் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். ஏனெனில் அவர்களின் சதவீத புள்ளிகள் 61.1 ஆக மட்டுமே உயரும்.
நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகளில் ஒன்றில் கூட இலங்கை அணி வெற்றிபெறத் தவறினால், அதன் வாய்ப்புகள் கணிசமாகக் குறையும். இலங்கை ஒன்றில் வெற்றி பெற்று மற்றொன்றை இழந்தால், அவர்களின் தவீத புள்ளிகள் 52.77 ஆக இருக்கும். மேலும், அவர்கள் ஒரு போட்டியில் வெற்றி பெற்று மற்றொன்று சமநிலையில் இருந்தால், அவர்களின் சதவீத புள்ளிகள் 55.55 ஆக இருக்கும். எனவே, இந்தியா அகமதாபாத் டெஸ்டில் தோற்றாலும் அல்லது ஆட்டம் டிராவில் முடிவடைந்தாலும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பைப் பெற்று விடும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2023: இந்தியாவின் வாய்ப்பு
ஆஸ்திரேலியா - இந்தியா அணிக்கு இடையிலான 4வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற வேண்டும். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இலங்கை ஒரு போட்டியில் தோல்வி அல்லது டிரா செய்ய வேண்டும்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2023: இலங்கையின் வாய்ப்பு
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு எதிரான தொடரில் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை தோற்கடிக்க வேண்டும், மறுபுறம் இந்தியா 4வது டெஸ்டில் தோல்வி பெற வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil