India Vs England | World Test Championship: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில், முதல் 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றி இருந்தது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தி உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் வெற்றிக்கு பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இந்த வெற்றிக்கு முன் 64.58 % சதவீதத்துடன் 2வது இடத்தில் இருந்த இந்திய அணி தற்போது 68.51 % சதவீதம் பெற்று முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது
முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி தற்போது 60.00 சதவீதத்துடன் 2வது இடத்தில் உள்ளது. இதையடுத்து 3 முதல் 9 இடங்களில் முறையே ஆஸ்திரேலியா (59.5%), வங்கதேசம் (50%), பாகிஸ்தான் (36.66%), வெஸ்ட் இண்டீஸ் (33.33%), தென் ஆப்பிரிக்கா (25%), இங்கிலாந்து (17.5%), இலங்கை (0%) உள்ளிட்ட அணிகள் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“