இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் டபிள்யூ.வி.ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பதவி வகித்த ரமேஷ் பொவாருக்கும் - இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை மித்தாலி ராஜுக்கும் இடையேயான பிரச்சனை அனைவரும் அறிந்ததே. அந்த சலசலப்பிற்கு பிறகு, ரமேஷ் பொவாரின் பதவிக் காலத்தை நீட்டிக்க பிசிசிஐ விரும்பவில்லை. இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் மந்தனா ஆகியோர் ரமேஷுக்கு ஆதரவு தெரிவித்தும், பிசிசிஐ அவரது எக்ஸ்டன்ஷன் பற்றி யோசிக்கவில்லை.
புதிய பயிற்சியாளர் பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது.
பயிற்சியாளர் பதவிக்கு மொத்தம் 28 பேர் விண்ணப்பித்தனர். அதிலிருந்து, 10 பேருக்கு மட்டும் நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அலுவகத்தில் நேர்காணல் நேற்று(டிச.20) நடந்தது.
இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியால் நியமிக்கப்பட்ட இடைக்கால தேர்வு கமிட்டியினரான முன்னாள் கேப்டன் கபில்தேவ், அன்ஷூமான் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் இறுதி பட்டியலில் இடம் பெற்றிருந்த 10 பேரிடமும் நேர்காணல் நடத்தினார்கள். இதில் டபிள்யூ.வி.ராமன், 2011ல் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய ஆண்கள் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்ட கேரி கிர்ஸ்டன், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் ஆகியோரை இறுதி செய்தது தேர்வுக் கமிட்டி. கிர்ஸ்டன்‘ஸ்கைப்’ மூலம் நேர்காணலில் கலந்து கொண்டார்.
இந்திய மகளிர் அணிக்கு ஏன் பயிற்சியாளராக வர விரும்புகிறீர்கள்?, மகளிர் கிரிக்கெட்டை பெரியளவில் முன்னேற்ற என்னென்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள்? போன்ற கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டன.
இந்திய அணியின் முன்னாள் வீராங்கனை கல்பனா வெங்கட்சர், ரமேஷ் பவார், மனோஜ் பிரபாகர் உள்பட 7 பேரும் நிராகரிக்கப்பட்டார்கள். 10 விண்ணப்பதாரர்களில் கலந்து கொண்ட ஒரே பெண் கல்பனா வெங்கட்சர் மட்டுமே.
இறுதி செய்யப்பட்ட மூன்று பேரில், கேரி கிர்ஸ்டன் முன்னிலையில் இருந்தார். அவர் ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். மகளிர் அணி தலைமை பயிற்சியாளராக பதவியேற்க வேண்டுமெனில், ஐபிஎல் பதவியை துறக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால், கிர்ஸ்டன் அதற்கு தயக்கம் காட்ட, அடுத்த இடத்தில் இருந்த டபிள்யூ.வி.ராமன் தலைமை கோச்சாக நியமிக்கப்பட்டார்.
சென்னையை சேர்ந்த 53 வயதான டபிள்யூ.வி.ராமன் இந்திய அணிக்காக 11 டெஸ்ட், 27 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார். தென்னாப்பிரிக்க மண்ணில் சதம் அடித்த (1992–93) முதல் இந்தியர் என்ற பெருமைக்குரிய டபிள்யூ.வி.ராமன், ரஞ்சி போட்டியில் தமிழ்நாடு மற்றும் பெங்கால் அணியின் பயிற்சியாளராகவும், 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் பயிற்சியாளராகவும் பதவி வகித்திருக்கிறார். தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் பேட்டிங் ஆலோசகராக உள்ளார்.
வரும் ஜனவரி மாதம் நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய மகளிர் அணியுடன் இணைந்து கொள்ளும் டபிள்யூ.வி.ராமன், தனது பணியை அந்தத் தொடரில் இருந்து தொடங்குகிறார்.