புகழ்பெற்ற மெக்சிகன் மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ (Rey Mysterio) மரணம் அடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், உண்மை என்னவென்பதை பார்ப்போம்.
WWE மல்யுத்த போட்டிகள் உலகம் முழுவதும் அதிக ரசிகர்களைக் கொண்ட போட்டிகளில் ஒன்று. குறிப்பாக இந்தியாவில், 90களில் தொடங்கி தற்போது வரை, WWE மல்யுத்த விளையாட்டுக்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்த WWE போட்டியில், பார்க்க சின்ன ஆளாக இருந்தாலும் ரிங்கில் எகிறி குதித்து சண்டையிடும் பிரபல வீரர் ரே மிஸ்டீரியோ. 90ஸ் கிட்ஸ்களின் மனதில் ரே மிஸ்டீரியோவுக்கு என தனி இடமுண்டு. குறிப்பாக ரே மிஸ்டீரியோ என்றாலே அவரின் முகமூடி தான் நியாபகம் வரும்.
இந்தநிலையில், ரிங்கிற்குள் பல ஜாம்பவான்களை மிரட்டிய ரே மிஸ்டீரியோ, உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகின. ஆனால் உண்மையில் உயிரிழந்தது ரே மிஸ்டீரியோ அல்ல, அவரது மாமாவான ரே மிஸ்டீரியோ சீனியர் தான். ரே மிஸ்டீரியோ சீனியர், ஜூனியர் இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி உடலமைப்புடன் முகமூடி அணிந்து இருப்பார்கள் என்பதால் ரே மிஸ்டீரியோ ஜூனியர் உயிரிழந்துவிட்டார் என்று தகவல் பரவியது. ஆனால், உண்மையில் உயிரிழந்தது 66 வயதான ரே மிஸ்டீரியோ சீனியர்.
ரே மிஸ்டீரியோ சீனியர் 70, 80 கால கட்டங்களில் மல்யுத்தத்தில் கலக்கியவர். இவரின் இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ். ஆரம்பத்தில் மெக்ஸிகோவில் லூச்சா லிப்ரே போட்டிகள் மூலம் புகழ் பெற்ற ரே மிஸ்டீரியோ சீனியர், உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தத்தின் ‘ஸ்டார்கேட்’ போன்ற நிகழ்வுகள் உட்பட சர்வதேச அளவில் தனது திறமையை வெளிப்படுத்தி இந்த இடத்தைப் பிடித்தார்.
இந்த சீனியர் ரே மிஸ்டீரியோ பயிற்சியின் கீழ் மிக சிறந்த மல்யுத்த வீரராக உருவெடுத்த 90'ஸ் கிட்ஸ் ரே மிஸ்டீரியோ அவரது முகமூடி உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்று வருகிறார். அவரது உண்மையான பெயர் ஆஸ்கார் குட்ரேஸ் ரூஃபியோ. இருவரும் ஒரே மாதிரியாக இருப்பதால் தங்களுக்குப் பிடித்த ரே மிஸ்டீரியோ மரணம் அடைந்து விட்டதாக 90ஸ் கிட்ஸ் குழப்பம் அடைந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“