Yashasvi Jaiswal | West Indies vs India, 2nd Test Tamil News: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், டொமினிகாவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால், இந்தியா தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் வியாழக்கிழமை முதல் தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 438 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் சதம் விளாசிய முன்னாள் இந்திய கேப்டன் கோலி 121 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரோகித் சர்மா 80 ரன்களும், ஜடேஜா 61 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்களும், அஸ்வின் 56 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி இந்திய அணியை விட 352 ரன்கள் பின்தங்கியுள்ளது. கிர்க் மெக்கென்சி 17 ரன்னுடனும், கிரேக் பிராத்வைட் 37 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
ஜெய்ஸ்வால் வீக்னஸ் அம்பலம்
இந்த ஆட்டத்தில் 57 ரன்கள் எடுத்த இந்திய அணியின் இளம் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் கிர்க் மெக்கென்சி வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது யஷஸ்வி ஃபுல் டெலிவரி பந்தை வைட் அவுட்சைடு ஆஃப் துரத்தினார், அதை டீப் கல்லியில் நின்று கொண்டிருந்த கிர்க் மெக்கென்சி லாவகமாக பிடித்தார். தன்னிடம் இருந்து அவுட்சைடு ஆஃப் விலகிச் செல்லும் பந்துகளுக்கு எதிராக ஆட்டத்தின் ஆரம்ப்பதிலே அவர் திணறி வந்தார். அதே பந்தில் அவர் ஆட்டமிழந்து வெளியேறியது அவருடைய பலவீனத்தை வெளிப்படுத்தியது.
இந்நிலையில், முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா, தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் முதல் நாள் ஆட்டத்தை மதிப்பாய்வு செய்து, 21 வயதான தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இது கவலை அளிக்கும் விஷயம் என்று குறிப்பிட்டார்.
“யஷஸ்வி நன்றாக பேட்டிங் செய்கிறார். இந்த இன்னிங்ஸில் அவர் ஆக்ரோஷமாக தோற்றமளித்தார். அவர் வெவ்வேறு வடிவங்களுக்கு நன்கு பொருந்துகிறார், ஆனால் ஒரு கவலை இருக்கிறது. அவரிடம் இருந்து விலகிச் செல்லும் பந்துகள் அவரைக் கொஞ்சம் தொந்தரவு செய்கிறது.
இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை, அவர் முன்பு 171 ரன்கள் எடுத்தார், இந்த ஆட்டத்திலும் அரை சதம் அடித்தார். அவர் பலத்திலிருந்து பலத்திற்குச் செல்வார் என்று நம்புவோம். ஆனால் பந்து வீச்சாளர்கள் அதே போன்ற பந்துகளை இப்போது அடிக்கடி வீசுவார்கள். மேலும் அவர் அதற்குத் தயாராக வேண்டும், அதை அவர் செய்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்." என்று ஆகாஷ் சோப்ரா கூறினார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் அற்புதமான சதம் விளாசி அசத்தி இருந்தார். இந்திய அணி 400 ரன்களைத் தாண்டவும், டொமினிகாவில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா உறுதியான வெற்றியைப் பதிவு செய்யவும் முக்கிய பங்காற்றி இருந்தார் ஜெய்ஸ்வால். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடக்கவுள்ள டி20 அணியிலும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.