/indian-express-tamil/media/media_files/2025/05/09/J0RytTkrwBuxqLhLpjlI.jpg)
யஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்போது மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் என்.ஓ.சி வழங்கும்படி தான் எழுப்பிய கோரிக்கையை திரும்ப பெற்றுள்ளார். இது தொடர்பாக அவர் இ-மெயில் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
மும்பை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் கோவா அணியில் சேர இருப்பதாக ஏப்ரல் 2 ஆம் தேதி தகவல் கிடைத்தது. அன்றைய தினம் மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு (எம்.சி.ஏ) அவர் அனுப்பிய இ-மெயிலில் அடுத்த சீசன் முதல் தனது கிரிக்கெட் மாநில அணியை மும்பையில் இருந்து கோவாவிற்கு மாற்றுவதற்கு தடையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி) வழங்கும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: EXPRESS EXCLUSIVE: Yashasvi Jaiswal does a U-turn, wants to continue playing for Mumbai
இந்நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்போது மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் என்.ஓ.சி வழங்கும்படி தான் எழுப்பிய கோரிக்கையை திரும்ப பெற்றுள்ளார். இது தொடர்பாக அவர் இ-மெயில் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அதில், அடுத்த உள்நாட்டு சீசனில் மும்பையை பிரதிநிதித்துவப்படுத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜெய்ஸ்வால் மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு அனுப்பியுள்ள இ-மெயிலில், “எனது குடும்பத்தினர் கோவாவுக்கு மாறுவதில் திட்டமிட்டிருந்தனர். அதனால் அந்த மாநில அணிக்காக ஆட என்.ஓ.சி வழங்கும்படி கோரி இருந்தேன். இப்போது அந்த கோரிக்கையை திரும்ப பெறுகிறேன். எனவே இந்த சீசனில் மும்பைக்காக விளையாட என்னை அனுமதிக்குமாறு மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நான் பி.சி.சி.ஐ-க்கோ அல்லது கோவா கிரிக்கெட் சங்கத்திற்கோ என்.ஓ.சி-ஐ சமர்ப்பிக்கவில்லை, ”என்று அவர் எழுதியிருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது. ஜெய்ஸ்வாலின் இந்தக் கடிதம் தொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்கம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
முன்னதாக, கோவா அணிக்கு தாவுவது குறித்து ஜெய்ஸ்வால் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், "கோவா எனக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது, மேலும் எனக்கு கேப்டன்சி பொறுப்பையும் வழங்கியுள்ளது. எனது முதல் குறிக்கோள் இந்தியாவுக்காக சிறப்பாகச் செயல்படுவதாகும், நான் தேசியப் பணியில் இல்லாத போதெல்லாம், நான் கோவாவுக்காக விளையாடி, அவர்களைப் போட்டிகளில் நீண்ட தூரம் செல்ல முயற்சிப்பேன். இது எனக்குக் கிடைத்த முக்கியமான வாய்ப்பு, நான் அதைப் பயன்படுத்திக் கொண்டேன்," என்று அவர் தெரிவித்திருந்தார்.
ஜெய்ஸ்வால் தனது 11 வயதில் உத்தரபிரதேசத்தின் படோஹியில் உள்ள சூரியவானில் இருந்து கிரிக்கெட்டைத் தொடர மும்பைக்குக் குடிபெயர்ந்தார். அவர் தனது 19 வயதுக்குட்பட்ட நாட்களில் இருந்து இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார். மேலும் சில சீசன்களுக்கு முன்பு விஜய் ஹசாரே டிராபியில் இரட்டை சதம் விளாசி மிரட்டினார்.
மும்பைக்காக அவர் செய்த சாதனைகள்தான் அவரை தேசிய தேர்வாளர்களின் பார்வையில் இடம்பெறச் செய்தன, மேலும் ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸுடன் ஒப்பந்தம் போட வைத்தது. 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது, அவர் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 43.44 சராசரியாக 391 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.