Asian-games 2023: சீனாவின் ஹாங்சோ நகரில் 9-வது ஆசிய விளையாட்டு போட்டி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்திய இந்தியா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை முதல் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
டி20 ஃபார்மெட்டில் விளையாடப்படும் இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம், மங்கோலியா, ஜப்பான், கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு, ஹாங்காங், தாய்லாந்து, ஆப்கானிஸ்தான் என மொத்தம் 14 அணிகள் களமாடியுள்ளன. இதில் 9 அணிகளை ஏ, பி, சி என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஏ - பிரிவில் நேபாளம், மாலத்தீவு, மங்கோலியா அணிகளும், பி - பிரிவில் கம்போடியா, ஹாங்காங், ஜப்பான் அணிகளும், சி - பிரிவில் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன. மீதமுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகளும் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
தற்போது லீக் சுற்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், ஏ, பி, சி பிரிவுகளில் இருந்து 4 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த அணிகளில் ஏற்கனவே கால்இறுதிக்கு தகுதி பெற்ற 5 அணிகளுடன் மோதும். அவ்வகையில், இன்று முதல் நடக்கும் கால்இறுதிப் போட்டியில் இந்த 8 அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. வெற்றியை ருசிக்கும் அணி நேரடியாக அரைஇறுதிக்கு முன்னேறும். 2 அரைஇறுதிப் போட்டிகளும் அக்டோபர் 6ம் தேதியும், இறுதிப்போட்டி அக்டோபர் 7ம் தேதியும் நடக்கிறது.
இந்தியா - நேபாளம் அணிகள் மோதல்
இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் முதலாவது கால்இறுதிப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி ரோஹித் பவுடல் தலைமையிலான நேபாளம் அணியுடன் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து 203 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி நேபாளம் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
வரலாறு படைத்த ஜெய்ஸ்வால்
இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக சதம் விளாசினார். 49 பந்துகளை எதிர்கொண்ட அவர் 8 பவுண்டரிகள் 7 சிக்ஸர்கள் என 100 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இருப்பினும், ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சிறப்பான சாதனைகளைப் படைத்துள்ளார்.
ஜெய்ஸ்வால் ஆசிய விளையாட்டு போட்டியில் சதம் விளாசியதன் மூலம் நடப்பு தொடரில் சதம் விளாசிய முதல் வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். இளம் வயதில் டி20 போட்டிகளில் சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
ஜெய்ஸ்வால் தனது 21 வயது மற்றும் 279 நாட்களில் டி20 சதத்தை பதிவு செய்திருக்கிறார். இதன் மூலம் சுப்மன் கில்லின் சாதனையை முறியடித்தும் அசத்தி இருக்கிறார். இந்திய அணிக்காக சுப்மன் கில் 23 வயது 146 நாட்களில் சதம் எடுத்தது சாதனையாக இருந்தது. மேலும், கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோருக்குப் பிறகு டி20யில் சதம் பதிவு செய்த 8வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ஜெய்ஸ்வால்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“