ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, அங்கு பாகிஸ்தானுக்கு எதிராக 3 ஒருநாள், 3 டெஸ்ட், 3 டி20 ஆகிய தொடர்களில் விளையாடி வருகிறது.
இதில், டி20 தொடரை, 3-0 என பாகிஸ்தான் வெல்ல, ஒருநாள் தொடர் 1-1 என டிராவானது. ஒரு போட்டிக்கு முடிவில்லை.
இந்த நிலையில், அதுதாபியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து த்ரில் வெற்றிப் பெற்றது. ஓருநாள் மற்றும் டி20 போட்டிகள் கூட தர முடியாத பரபரப்பை இந்தப் போட்டியில் ரசிகர்கள் அனுபவித்தனர்.
இந்தச் சூழ்நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே கடந்த 24ம் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 5 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
ஹாரிஸ் சோஹைல் 147 ரன்களும், பாபர் அசம் 127 ரன்களும் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ஜீத் ராவல், டாம் லாதம் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தனர்.
இந்த ஜோடியை பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா பிரித்தார். ஆனால், அதற்கு பிறகு நடந்தது மரண பங்கம். யாசிர் ஷாவின் பந்துவீச்சில், புயலில் அடுத்தடுத்து சாயும் மரங்களை போல, விக்கெட்டுகள் சரிந்தன.
50-1 என்ற நிலையில் இருந்த நியூசிலாந்து, 90 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் மட்டும் டபுள் டிஜிட்டில் ரன் எடுக்க, ராஸ் டெய்லரில் இருந்து வரிசையாக எட்டு பேட்ஸ்மேன்கள் சேர்த்து அடித்த மொத்த ரன்கள் 5 மட்டுமே.
யாசிர் ஷா மட்டும் 8 விக்கெட்டுகளை சாய்த்தார். இப்படியொரு, பரிதாபமான சூழ்நிலை உருவாகும் என பாகிஸ்தான் பவுலர்கள் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நொந்து போனது நியூசிலாந்து.
இதைத் தொடர்ந்து, நியூசிலாந்து மீண்டும் தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியது. இதிலும், அவர் அதே நாளில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இதனால், டெஸ்ட் போட்டியில், ஒரே நாளில் பத்து விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியாவின் கும்ப்ளேவின் சாதனையை பாகிஸ்தான் பவுலர் யாசிர் ஷா சமன் செய்தார்.
பிப்ரவரி 7, 1999ம் ஆண்டு பாகிஸ்தானிற்கு எதிராக அனில் கும்ப்ளே இச்சாதனையை படைத்தார். ஆனால், ஒரே நாளில் ஒரே இன்னிங்ஸில் கும்ப்ளே பத்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கு, யாசிர் ஷா முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டும் என மொத்தம் 10 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். எனினும், இந்த 10 விக்கெட்டும் ஒரே நாளில் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், 19 ஆண்டுகள், 9 மாதங்கள் 19 நாட்கள் கழித்து, கும்ப்ளேவின் மெகா சாதனையை டெஸ்ட் பவுலர் ஒருவர் தொட்டுப் பார்த்துள்ளார். அதுவும், கும்ப்ளே எந்த அணிக்கு எதிராக இந்தச் சாதனையை நிகழ்த்தினாரோ, அதே பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த யாசிர் ஷா, தற்போது அச்சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளார்.