2024 ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வருகிற ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, 2028 ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032ல் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், 2036 ஒலிம்பிக் போட்டியை எடுத்து நடந்த இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை தயார் செய்ய மத்திய விளையாட்டு அமைச்சகம் மும்முரமாக செயலாற்றி வருகிறது. அதேநேரத்தில், மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 'மிஷன் ஒலிம்பிக் செல்' அமைப்பு டி-20 கிரிக்கெட், கபடி, செஸ், ஸ்குவாஷ் மற்றும் கோ கோ உள்ளிட்ட போட்டிகளை 2036 ஒலிம்பிக் போட்டியுடன் சேர்ப்பதற்கு பரிந்துரைக்க திட்டமிட்டு வருகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Yoga at the Asian Games? IOA begins push to get discipline included as sport in Asiad
2036 ஒலிம்பிக் போட்டியை எடுத்து நடத்தும் ஹோஸ்டிங் உரிமையை வென்றால், 2036 ஒலிம்பிக் போட்டிகளுக்கு யோகாவை புதிய விளையாட்டாக சேர்க்கும் வாய்ப்பை இந்தியா ஆராய்ந்து நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் யோகாவை சேர்க்க இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஓ.ஏ) நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஐ.ஓ.ஏ தலைவர் பி.டி உஷா, ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் ராஜா ரந்தீர் சிங்குக்கு எழுதிய கடிதத்தில், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை வளர்க்கும் பண்டைய இந்திய விளையாட்டை ஆசிய விளையாட்டு போட்டியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் என்று ஐ.ஓ.ஏ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஓ.ஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "உலகம் முழுதும் ஜூன் 21 அன்று 10-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் யோகாவை ஏற்றுக்கொண்டு பலன்களைப் பெற்றுள்ளனர். யோகாவின் ஆன்மீக இல்லமாகவும், விஸ்வகுருவாகவும் இந்தியா உள்ளது. அதனால், ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், தொடர்ந்து ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்தியா இந்த விளையாட்டைச் சேர்ப்பதற்காக பிரச்சாரம் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்.
யோகா ஒரு விளையாட்டாக ஒளிபரப்பாளர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான கருத்தாகும். கேலோ இந்தியா கேம்ஸின் ஒரு பகுதியாக யோகா உள்ளது. அதன் வெற்றியைக் கண்டு, கோவாவில் உள்ள தேசிய விளையாட்டுப் போட்டி அமைப்பாளர்கள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மல்லகம்ப் மற்றும் யோகாசனங்கள் உள்ளிட்ட யோகாவைச் சேர்த்தனர். ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் எனது முன்மொழிவை ஏற்க நல்ல காரணத்தைக் கண்டுபிடிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகம் அடுத்த மாதம் ஒலிம்பிக்கிற்கு முன்னதாக பயிற்றுவிப்பாளர்களுடன் யோகா அமர்வுகளில் பங்கேற்க பார்வையாளர்களுக்கு வாய்ப்பளிக்கும். அதனால் லோவ்ரே யோகாவை வரவேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விளையாட்டை ஆசிய விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் சேர்த்து அங்கீகாரம் பெறச் செய்வது எங்கள் பொறுப்பு.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் யோகாவைச் சேர்ப்பது அந்த விளையாட்டை ஒலிம்பிக்கிற்கு அழைத்துச் செல்வதற்கான முதல் படியாக இருக்கும் என்று மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா என்னிடம் கூறினார். அத்தகைய தளங்களில் நமது உள்நாட்டு விளையாட்டு இருக்க வேண்டும்," என்று ஐ.ஓ.ஏ தலைவர் டாக்டர் பி.டி உஷா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“