சவுரவ் கங்குலி கேப்டன்சியில் கிடைத்த ஆதரவு தோனியிடமிருந்தோ, கோலியிடமிருந்தோ கிடைக்கவில்லை என்று யுவராஜ் சிங் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
Advertisment
இதுகுறித்து ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் சவுரவ் கங்குலி தலைமையில் நிறைய விளையாடியுள்ளேன், அவர் எனக்கு பெரிய அளவில் ஆதரவளித்தார்.
பிறகு மாஹி (தோனி) கேப்டன் பொறுப்பேற்றார், தோனி, கங்குலி கேப்டன்களை பிரித்துப் பார்ப்பது கடினம் என்றாலும் என் நினைவுகள் கங்குலி காலத்தை சுற்றியே வட்டமிடுகின்றன, காரணம் அவர் எனக்கு மிக ஆதரவாக இருந்தார்.
அது போன்ற ஆதரவு எனக்கு தோனியிடமிருந்தோ, கோலியிடமிருந்தோ கிடைக்கவில்லை.” என்றார் யுவராஜ் சிங்.
யுவராஜ் சிங் ஜூன் 2019-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். தோனியின் கீழ் 2007 டி20 உலகக்கோப்பை பிறகு, 2011 ஐசிசி உலகக்கோப்பைகளை இந்திய அணி வென்ற போது யுவராஜ் சிங் பெரிய அளவில் பங்களிப்புச் செய்தார். தொடர் நாயகன் விருதும் வென்றார்.
யுவராஜ் 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில், கங்குலி தலைமையில் 110 போட்டிகளிலும், தோனி தலைமையில் 104 போட்டிகளிலும் ஆடியிருக்கிறார்.
இதில் சுவாரஸ்யம் என்னவெனில், தோனியின் கீழ் விளையாடிய போது தான் யுவராஜ் பல சாதனைகளை படைத்துள்ளார். தோனியின் கேப்டன்சியில், 104 ஒருநாள் போட்டிகளில் 3077 ரன்கள் எடுத்துள்ளார், கங்குலியின் கீழ் 110 ஒருநாள் போட்டிகளில் 2640 ரன்கள் எடுத்துள்ளார்.
“ஐபிஎல் இல்லாதபோது நான் கிரிக்கெட்டுக்கு வந்தேன். நான் என் ஹீரோக்களை திரையில் பார்த்துக் கொண்டிருந்தேன், திடீரென்று நான் அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்தேன். நான் அவர்களிடம் அத்தகைய மரியாதை வைத்திருந்தேன், அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், ஊடகங்களுடன் எப்படி பேச வேண்டும் என்று கற்றுக்கொண்டேன். நிறைய கற்றல் இருந்தது. இன்று, பெரும்பாலும் ஒரே வயதில் இருக்கும் வீரர்களுக்கு வழிகாட்ட எந்த மூத்தவர்களும் இல்லை" என்று யுவராஜ் மேலும் பேசியிருக்கிறார்.
ரசிகர்களுக்கு நினைவிருக்குமா என்று தெரியவில்லை. யுவராஜின் தந்தை யோகராஜ் சிங், தோனியை எப்போதுமே மிகக் கடுமையாக விமர்சித்து வந்திருக்கிறார். தன் மகன் யுவராஜின் கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வந்ததற்கு தோனி தான் காரணம் என்று கூட அவர் பேசியிருக்கிறார்.
யோகராஜ் யார் என்று நினைக்குறீங்க?
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த தர்பார் படத்தின் தொடக்க சண்டைக் காட்சியில் தாதாவாக, ரஜினி முன் நிற்பாரே அவரே தான்!.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”