குறுகிய ஓவர் கிரிக்கெட்டில் சரியான நான்காம் நிலை வீரரை கண்டறிய இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கடந்த இரண்டு வருடங்களாகவே திணறி வருகிறது. அதன் பிரதிபலிப்பு, 2019 உலகக் கோப்பையிலும் எதிரொலித்தது. ரோஹித், கோலி என இருவர் மட்டுமே பெரும்பான்மையான ரன்கள் அடிக்க, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தடுமாறியதை கண்கூடாக பார்க்க நேரிட்டது.
இன்னமும், நான்காம் நிலை வீரரை இந்திய அணியால் கண்டறிய முடியவில்லை. லோகேஷ் ராகுல் மீது அபார நம்பிக்கையை வைத்தாலும், அவரது செமி கன்சிஸ்டன்சி டார்ச்சரால் எந்தவொரு முடிவுக்கும் வரமுடியவில்லை.
இதற்கிடையில் தோனியின் மௌனம், ரிஷப் பண்ட் வாய்ப்பு, ரிஷப் பண்ட்டுக்கு மாற்று என்று பாஸிட்டிவ் டெம்போ இல்லாமலேயே பிசிசிஐ பயணம் செய்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், யுவராஜ் சிங்கின் வார்த்தைகள் கேப்டன் விராட் கோலியின் ரசிகர்களை சமூக வலைத்தளம் பக்கம் இழுத்து வந்திருக்கிறது. வேறு எதற்கு சண்டை போடத் தான்!.
ஆஜ் தக் எனும் செய்தி நிறுவனத்துக்கு யுவராஜ் சிங் அளித்த பேட்டியில், "முன்பெல்லாம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே இருந்தது. இரு ஃபார்மட் என்பதால், கேப்டனுக்கு பெரிய பணிச்சுமை இருக்காது. ஆனால், டி20 வந்த பிறகு, மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் ஒரே கேப்டன் என்பது சுமையைத் தான் அதிகரிக்கும். விராட் கோலிக்கும் அதிக பணிச்சுமை இருக்கிறது. ஆகையால், வேறு ஒரு கேப்டனை டி20 தொடருக்கு மட்டும் பயன்படுத்திப் பார்க்கலாம். டி20ல் ரோஹித் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக வலம் வருகிறார்.
ஆனால், இதுகுறித்து அணி நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும். எதிர்காலத்தை எப்படி கட்டமைக்க வேண்டும் என்ற அவர்களது திட்டத்தை பொறுத்து இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும். விராட் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் தான். ஆனால், அவரது பணிச்சுமையை எப்படி பேலன்ஸ் செய்வது?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் யுவராஜ்.
'ஏற்கனவே அவிங்களுக்கும் நமக்கும் வாய்க்கா தகராறு' என்பது போல, கோலி - ரோஹித் ஈகோ பிரச்சனை கடந்த ஒரு மாத காலமாகவே ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், யுவராஜின் இந்த ஐடியா விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் என்பது சூப்பர் ஸ்டார்களை கொண்ட அமைப்பு என்பது பேஸிக் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தெரிந்த ஒரு விஷயம். சுனில் கவாஸ்கர், கபில் தேவ், சச்சின், தோனி என்று தனிப்பட்ட சூப்பர் ஸ்டார்களை மையப்படுத்தியே சுழன்று வருகிறது. அந்த வகையில் தோனியின் நீட்சியாக சூப்பர் ஸ்டாரானவர் விராட் கோலி. ஐபிஎல் தொடரில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஒவ்வொரு சீசனிலும் எவ்வளவு மோசமாக தோற்றாலும், மாற்றப்படாத கேப்டனாக கோலி நீடிப்பதிலேயே, சூப்பர் ஸ்டார் வெளிச்சத்தின் ஊடுருல் எந்த அளவுக்கு ஆழமானது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
அப்படிப்பட்ட சூப்பர் ஸ்டார் களத்தில் மிதக்கும் இந்திய கிரிக்கெட், ஆடுகளத்தில் இதுபோன்ற அதிரடி மாற்றங்களை எதிர்காலத்தில் உருவாக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.