/indian-express-tamil/media/media_files/2025/03/17/DuzgyqMx3k7csWNguobU.jpg)
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது யுவராஜ் சிங் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டினோ பெஸ்டுடன் களத்தில் வார்த்தைப் போரில் ஈடுப்பட்டார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. 6 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் லீக் மற்றும் அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதிய இறுதிப் போட்டி ராய்ப்பூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதது. அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக லெண்டில் சிம்மன்ஸ் 57 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் வினய் குமார் 3 விக்கெட்டுகளும், ஷபாஸ் நதீம் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 149 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை இந்தியா துரத்தியது. அதிரடியாக இந்திய வீரர்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இந்திய அணி 17.1 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 149 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தியா தரப்பில் சிறப்பாக ஆடிய அம்பத்தி ராயுடு 74 ரன்கள் எடுத்தார்.
வார்த்தைப் போர்
இந்நிலையில், இந்தப் போட்டியின் போது யுவராஜ் சிங் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டினோ பெஸ்டுடன் களத்தில் வார்த்தைப் போரில் ஈடுப்பட்டார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கேப்டன் பிரையன் லாரா தலையிட்டு சமாதானம் செய்து வைத்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
Lafda with Yuvraj vs Tino best ☠️ #IMLT20Final#YuvrajSingh#IMLT20
— CricFreak69 (@Twi_Swastideep) March 16, 2025
pic.twitter.com/FfPJTvOBVt
வெஸ்ட் இண்டீஸ் வீரர் டினோ பெஸ்ட் தனது ஓவரை முடித்துவிட்டு, காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேற விரும்புவதாக கள நடுவரிடம் தெரிவித்தார். அப்படியெல்லாம் திடீரென வெளியேற முடியாது என்பதுபோல் யுவராஜ் சிங் நடுவரிடம் வாதிட்டார். அதனால், நடுவர் பில்லி பௌடன் டினோ பெஸ்ட்டை மீண்டும் களத்திற்குள் வரச் சொன்னார்.
இதனைக் கண்டு கோபமடைந்த வேகப்பந்து வீச்சாளர் டினோ பெஸ்ட், யுவராஜ் சிங்கிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். பிறகு, இருவரும் கடுமையாக பேசிக் கொண்டனர். அவர்கள் இருவரும் பின்வாங்குவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. அப்போது, வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கேப்டன் பிரையன் லாரா தலையிட்டு இருவரையும் பிரித்து சமாதானம் செய்தார். இதேபோல், அம்பதி ராயுடு-வும் டினோ பெஸ்ட்டை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.