இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஓய்வை இன்று(ஜூன்.10) அறிவித்து இருக்கிறார்.
2000-மாவது ஆண்டில் நடந்த ஐசிசி நாக் அவுட் டிராபி தொடரில், கென்யாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், கங்குலி தலைமையிலான இந்திய அணியில் இடம் பிடித்தவர் யுவ்ராஜ் சிங். பால் வடியும் முகத்துடன் களமிறங்கிய யுவ்ராஜ், அதே தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் 84(80) ரன்கள் எடுத்து, முதன் முதலாக தனது திறமையை உலகத்துக்கு வெளிக்காட்டினார்.
அதன்பிறகு, இந்திய அணியில் ராஜாங்கம் நடத்திய யுவ்ராஜ் சிங், 2006 காலக்கட்டத்திற்கு பிறகு மெகா அதிரடி வீரராக உருமாறினார். 2007ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி உலக சாதனை புரிந்தார்.
2011ல் உலகக் கோப்பைத் தொடரில் தொடர் நாயகன் விருது வென்று அசத்திய யுவ்ராஜ் சிங், அதன் பிறகு கேன்சரால் பாதிக்கப்பட, தீவிர சிகிச்சைக்குப் பிறகு அந்த வேதனையில் இருந்து மீண்டு வந்து மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார். அவ்வப்போது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், சீரான ஆட்டத்தை அவரிடம் இருந்து பார்க்க முடியவில்லை. இதனால், அணியில் இன் அன்ட் அவுட்டாகவே இருந்தார்.
2017க்கு பிறகு, இந்திய அணியில் அவரால் இடம் பிடிக்கவே முடியவில்லை. இந்நிலையில், சர்வதேச போட்டிகளில் இன்று தனது ஓய்வை அவர் அறிவித்து இருக்கிறார்.
304 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள யுவ்ராஜ், 8,701 ரன்களும், 40 டெஸ்ட் போட்டிகளில் 1,900 ரன்களும், 58 டி20 போட்டிகளில் 1,177 ரன்களும் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 14 சதங்களும், 52 அரை சதங்களும் விளாசி இருக்கிறார்.
தோனி வென்ற இரு உலகக் கோப்பையிலும், யுவ்ராஜ் சிங் பெயர் தங்க எழுத்துக்களால் என்றும் பொறிக்கப்பட்டிருக்கும்.