'இந்த யுவராஜ் தான் எங்களுக்கு வேண்டும்'! - ரசிகர்களை மீண்டும் கொண்டாட வைத்த யுவி!

நான் வருத்தத்துடன் வெளியேற விரும்பவில்லை

யுவராஜ் சிங்… இந்திய கிரிக்கெட்டில் நிச்சயம் என்றைக்கும் மறக்க முடியாத ஒரு வலிமையான பெயர் இது. 2011 உலகக் கோப்பையில் தொடர் நாயகர் விருதை வென்ற இந்த நாயகன் அதன்பிறகு புற்றுநோயில் இருந்து போராடி மீண்டு வந்து, மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

ஆனால், 2011க்கு முந்தைய தனது அபாரமான ஃபெர்மான்ஸை அவரால் வெளிப்படுத்த முடியவில்லை. ஐபிஎல் போட்டிகளில் 2015 வரை சிறப்பாக விளையாடினாலும், அதன் பிறகு அதிலும் அவரால் சோபிக்க முடியவில்லை. இந்திய அணியில் அவ்வப்போது சேர்ப்பது, நீக்கப்படுவது என்று இருந்துவந்த யுவராஜுக்கு தற்போது சுத்தமாக இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படுவதே இல்லை.

கிட்டத்தட்ட அவர் அணியில் இருந்து முற்றிலும் ஒதுக்கப்பட்டுவிட்டார் என்றே கூறலாம். அவரது மோசமான ஃபார்ம் மற்றும் பிட்னஸ் இழப்பு போன்றவை அவரை சர்வதேச கிரிக்கெட் களத்தில் இருந்து வெளியேற்றியது. இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் கூட, அவரை எந்த அணியும் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. கடைசி சுற்றில் தான் மும்பை அணி யுவராஜை தேர்வு செய்தது. அதுவும், அடிப்படை விலையான 1 கோடிக்கே அவரை வாங்கியது.

அந்த ஏலத்திற்கு பிறகு கருத்து தெரிவித்த யுவராஜ் சிங், “கிரிக்கெட் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது. நான் கிரிக்கெட்டை விட்டு வெளியேறும் போது, என்னுடைய சிறப்பான நிலையை வெளிப்படுத்த வேண்டும். நான் வருத்தத்துடன் வெளியேற விரும்பவில்லை” என்றார். இது யுவராஜ் ரசிகர்களை மட்டுமில்லாது, இந்திய ரசிகர்களையும் வேதனையில் ஆழ்த்தியது.

எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு அவர் தயாராகி வரும் நிலையில், மாலத்தீவில் நட்பு ரீதியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் செய்த யுவராஜ் சிங், ரிவர்ஸ் ஸ்வீப் சிக்ஸ் அடித்த வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகியுள்ளது. தோனி, கோலி, ரோஹித் என்று சமூக தளங்களை ஆக்கிரமிக்கும் ஹெஷ்டேக்குகளுக்கு மத்தியில், யுவி, யுவராஜ் போன்ற ஹேஷ்டேக்குகள் தற்போது வைரல் ஆவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கமான் யுவி!.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close