“அஸ்வின் சிறந்த பந்துவீச்சாளர்தான். ஆனால், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட அவர் தகுதியானவர் இல்லை” என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அண்மையில் அளித்த பேட்டியில், “அஸ்வின் ஒரு மிகச்சிறந்த பவுலர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அவரை டி20, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெறுவதற்கு தகுதியானவராக நான் நினைக்கவில்லை. பந்துவீச்சில் அவரால் சிறப்பாக செயல்பட முடியும். அதேசமயம் பேட்ஸ்மேனாகவும், ஃபீல்டராகவும் அவரால் அணிக்கு என்ன பங்களிப்பை செய்துவிட முடியும்?. டெஸ்ட் கிரிக்கெட்டில் நிச்சயமாக அவர் இடம்பெற வேண்டும். ஆனால், வொயிட் பால் கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்திய அணியில் இடம்பெறுவதற்கு அவர் தகுதியானவர் என நான் நினைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2010-ம் ஆண்டு அறிமுகமானார். 2011 ஒருநாள் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியிலும், 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார்.
அஸ்வினுக்கு 2021, 2022 டி20 உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் மட்டும் விளையாடினார்.
அஸ்வினுக்கு ஒருநாள், டி20 வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் நிலையில், யுவராஜ் சிங்கின் இந்த கருத்து வந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“