கனடாவில் நடைபெற்று வரும் குளோபல் டி 20 தொடரில், இந்திய வீரர் யுவராஜ் சிங், வித்தியாசமான முறையில் அவுட் ஆன நிகழ்வு, கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும்விவாதப்பொருளாக மாறியுள்ளது.
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரராக விளங்கியதோடு மட்டுமல்லாது, கேன்சர் எனும் கொடிய நோயையும் வென்றனர் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். இவர், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். தற்போது அவர், கனடாவில் நடக்கும் குளோபல் டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். டொரன்டோ நேஷனல்ஸ் அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் உள்ளார்.
குளோபல் டி20 தொடரின் முதல் போட்டி, யுவராஜ் தலைமையிலான டொரன்டோ நேஷனல்ஸ் அணிக்கும், கிறிஸ் கெயில் தலைமையிலான வான்கூவர் நைட்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.
இந்த போட்டியில் நைட்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. 4வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார் நேஷனல்ஸ் அணியின் கேப்டன் யுவராஜ். அடி முதுகுப் பகுதியில் வலி இருந்ததால், முதலில் இருந்தே யுவராஜ் பேட்டிங் செய்ய திணறினார். 27 பந்துகள் விளையாடி 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் யுவராஜ். ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸின் 17வது ஓவரை வீசினார் ரிஸ்வான் சீமா. அப்போது பேட்டிங் செய்த யுவராஜ், க்ரீஸிலிருந்து வெளியே வந்து ஆடினார். எதிர்பாராத விதமாக பந்து எட்ஜ் ஆனது. அந்த எட்ஜ் கேட்ச்சை கீப்பரும் பிடிக்கவில்லை. கீப்பர் மீது பட்டபிறகு, அந்த பந்து ஸ்டம்பில் பட்டது. இதனால், களத்திலிருந்து வெளியேறினார் யுவராஜ். ஆனால், ரிப்ளேயில் பார்க்கும்போது யுவராஜ் சிங், அவுட் ஆகவில்லை என்று தெரிந்தது. ஆக மொத்தம், தனது கம்-பேக் முதல் போட்டியில் வித்தியாசமான முறையில் யுவராஜ் சிங், அவுட்டாகி வெளியேறியது, கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது.