இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்தவர் யுஸ்வேந்திர சாஹல். தற்போது இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். இவரும் பிரபல பாடகியும், மாடலுமான தனஸ்ரீ வர்மாவும் கடந்த 2020 டிசம்பரில் திருமணம் முடித்தனர்.
இதன் பின்னர் இருவரும் ரொமாண்டிக்கான பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியது. இதனை உறுதிப் படுத்தும் வகையில், சமீபத்தில் இருவரும் பரஸ்பரம் பிரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மனு
இந்நிலையில், சாஹல் தரப்பிலும், தனஸ்ரீ வர்மா தரப்பிலும் விவாகரத்து கோரி விண்ணப்பித்தனர். கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி சாஹல் - தனஸ்ரீ வர்மா இருவரும் மும்பையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி முறையிட்டனர். அந்த மனுவில் தாங்கள் இருவரும் 2022 ஆம் ஆண்டு முதலே பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், அதனால், ஆறு மாத கட்டாயக் காத்திருப்பு காலத்தை நீக்கி விட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மனுவை கடந்த பிப்ரவரி 20 அன்று விசாரித்த மும்பையில் உள்ள பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றம், ஆறு மாத கட்டாயக் காத்திருப்பு காலத்தை நீக்கி விட வேண்டும் என்கிற அவர்களின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும், சாஹல் தனஸ்ரீக்கு வழங்க வேண்டிய ரூ 4.75 கோடி ஜீவனாம்சத்தை முழுமையாக வழங்கவில்லை என்றும், அவர் ரூ. 2.37 கோடி மட்டுமே செலுத்தியுள்ளார் என்றும் குறிப்பிட்டது. அத்துடன், குடும்ப நல நீதிமன்றம் திருமண ஆலோசகரின் அறிக்கையையும் மேற்கோள் காட்டி, அதில் மத்தியஸ்த முயற்சிகளில் ஓரளவு மட்டுமே இணக்கம் இருந்ததாகக் கூறப்பட்டது.
உத்தரவு
இதையடுத்து, சாஹல் தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று புதன்கிழமை விசாரித்த நீதிபதி மாதவ் ஜம்தார், வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) சாஹல் பங்கேற்பதைக் கருத்தில் கொண்டு விவாகரத்து மனுவை நாளைக்குள் (மார்ச் 20) முடிவு செய்யுமாறு குடும்ப நல நீதிமன்றத்திற்கு அதிரடியான உத்தரவைப் பிறப்பித்தார்.
ஐ.பி.எல் தொடருக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சாளராக சாஹல் இருக்கிறார். மேலும், மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் தொடருக்காக தனது அணியுடன் அவர் இணைய உள்ளார். இதனைக் கருத்தில் எடுத்துக் கொண்ட நீதிபதி, "மனுதாரர் 1 (சாஹல்) ஐ.பி.எல்-லில் பங்கேற்பவர் என்பதால், மார்ச் 21 முதல் அவர் வர முடியாமல் போகலாம் என்று அவரது வழக்கறிஞர் தெரிவிக்கிறார். எனவே, குடும்ப நல நீதிமன்றம் நாளைக்குள் மனுவை முடிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது," என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஜீவனாம்சம்
சாஹல் - தனஸ்ரீ வர்மா குடும்ப நல நீதிமன்றத்தில், இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13பி இன் கீழ் தாக்கல் மனு செய்தனர். இந்தப் பிரிவு பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து செய்ய பரிந்துரைக்கிறது. இருப்பினும், பிரிவு 13 பி(2) இன் படி, ஒரு குடும்ப நீதிமன்றம் பரஸ்பர விவாகரத்து மனுவை தாக்கல் செய்த நாளிலிருந்து அடுத்த ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் பரிசீலிக்க முடியும். தீர்வு மற்றும் மீண்டும் இணைவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக அந்த தம்பதியினருக்கு ஆறு மாதம் கட்டாயக் காத்திருப்பு காலம் வழங்கப்படுகிறது.
ஆனால், சாஹலும் தன்ஸ்ரீயும் 2 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரிந்து வாழ்ந்ததால், இந்த வழக்கில் ஆறு மாத கட்டாயக் காத்திருப்பு காலம் பொருந்தாது என்று மும்பை உயர்நீதிமன்றம் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், விவாகரத்து ஆணைக்குப் பிறகுதான், நிரந்தர ஜீவனாம்சத்தின் இரண்டாவது தவணையை செலுத்துவதற்கு ஒப்புதல் விதிமுறைகள் இணங்குவதாக மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
இதனால், சாஹல் விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வெளிவந்த பிறகுதான் தன்ஸ்ரீ-க்கு முழுமையான ஜீவனாம்சம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தொகை ரூ 4.75 கோடியாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.