/tamil-ie/media/media_files/uploads/2017/07/Indian_wedding_Delhi-470x260.jpg)
திருமணம் புகைப்படம் வரவில்லையா?
திருமண புகைப்படங்களைத் தராத புகைப்பட நிறுவன (ஸ்டுடியோ) உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் முனைவா் பட்ட ஆய்வு செய்து வருபவா் மாணவி எஸ்.சதாக்ஷி அக்னிஹோத்ரி (வயது 29). இவா், உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் கடந்த 20-04-2021 அன்று நடைபெற்ற திருமண நிகழ்வுக்காக புகைப்படங்கள், விடியோ எடுக்க, கான்பூா் சாரதா நகரைச் சோ்ந்த தனியாா் ஸ்டுடியோ உரிமையாளா் ரவிசிங்குக்கு திருச்சியிலிருந்து ரூ.33,600 முன்பணம் செலுத்தியிருந்தாா்.
அதன்படி திருமண நிகழ்வில் புகைப்படங்கள் எடுத்த பிறகு ரவிசிங் ஓராண்டாகியும் புகைப்படங்கள் மற்றும் விடியோவை வழங்காமல் இழுத்தடித்துள்ளாா். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சதாக்ஷி அக்னிஹோத்ரி, திருமண விடியோ மற்றும் புகைப்படங்களை வழங்குவதுடன், மனஉளைச்சலுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் 31-11-2022 ஆம் ஆண்டு வழக்குத் தொடா்ந்தாா்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதலில் திருமண புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை வழங்க வேண்டும் என ரவிசிங்குக்கு உத்தரவிட்டது. உத்தரவை ஏற்காததால், புகைப்படம் மற்றும் விடியோவுடன் ரூ. 33,600 பணத்தை 2 மாதங்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் திருப்பி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதையறிந்த ரவிசிங், மனுதாரருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவுக்கு திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் ஆா். காந்தி தலைமையிலான குழுவினா், ரவிசிங் மனுதாரருக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ. 1 லட்சம் அபராதமும், ரூ. 20 ஆயிரம் இழப்பீடும், வழக்கு செலவாக 5,000 ரூபாயும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.
நிறைவேற்றாததால், மனுதாரா் சதாக்ஷி அக்னிஹோத்ரி நிறைவேற்று மனு தாக்கல் செய்தாா். இதனை விசாரித்த குறைதீா் ஆணையமானது, நீதிமன்றத்தை அவமதித்ததாக ரவிசிங்கை கைது செய்யும்படி ஆணை பிறப்பித்தது.
இதையடுத்து உத்தரபிரதேசத்தில் இருந்த ரவிசிங்கை போலீஸாா் பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடா்ந்து ரவிசிங், வழக்கை சுமூகமாக முடிப்பதற்காக மனுதாரா் சதாக்ஷி அக்னிஹோத்ரிக்கு ரூ.1.25 லட்சத்தை வழங்கினாா்.
இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. முன்னதாக, திருச்சியில் வழக்கு தொடர்ந்த பெண் திருச்சியில் எத்தனையோ போட்டோ ஸ்டூடியோக்கள், புகைப்படக் கலைஞர்கள், அதிநவீன பிரின்டிங் லேபுகள் இருக்கும்போது திருச்சி விட்டுவிட்டு உத்திர பிரதேசத்தில் புகைப்படக் கலைஞரை தேர்வு செய்ததில் மன உளைச்சல் மட்டுமே மிஞ்சியது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.