வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடுக்கு தடையில்லை; இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது – ஐகோர்ட் இடைக்கால உத்தரவு

வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டத்தின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை, பணி நியமனங்கள் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று உயர்நீதி மன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பில் வன்னியர்களுக்க்கு 10.5 சதவிகித இடஒதுக்கீடு சட்டத்திற்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டத்தின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை, பணி நியமனங்கள் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று உயர்நீதி மன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடம்பெற்றுள்ள வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி போராடி வந்த நிலையில், முந்தைய அதிமுக அரசு தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, பிப்ரவரி மாதம், அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பில் 10.5 சதவீதம் சிறப்பு உள் இட ஒதுக்கீடு அளித்து சட்டத்தை நிறைவேற்றியது. இதையடுத்து, வந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, வன்னியர்களுக்கு 10.5% இடஒதுகீட்டுக்கான அரசாணையை வெளியிட்டது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான 20 சதவீதம் இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த ஆண்டு பிப்ரவரியில் இயற்றப்பட்ட வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது பிரிவு நீதிபதிகளின் அமர்வு சுந்தரேஷ் மற்றும் எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குகளில் நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

வன்னியகுல சத்ரியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடுக்கு தடை இல்லை. அதே நேரத்தில், வன்னியகுல சத்ரியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதன் மூலம் கல்வி நிறுவனங்களில் அல்லது அரசு பணியிடங்களில் நியமனம் செய்யப்படும் எல்லா சேர்க்கையும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு இந்த சட்டத்தின் அனைத்து பயனாளிக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள்ள பயனாளிகள் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மிகப்பெரிய வழக்குகளில் இது 10.5% இடஒதுக்கீடு செயல்படுத்தப்படலாம் என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

பாமக வழக்கறிஞர் கே.பாலு இந்த சட்டத்தை செயல்படுத்தக் கோரி மனு தாக்கல் செய்தார். மற்றவர்கள் இந்த சட்டத்திற்கு ஆதரவாக தங்கள் வாதங்களை சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்டது. செப்டம்பர் 14 முதல் இறுதி விசாரணைக்கு முக்கிய பொது நல மனுக்களை பட்டியலிட உயர் நீதிமன்ற பதிவுக்கு உத்தரவிட்டனர்.

வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதன் மூலம் அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் சேர்க்கை மற்றும் பணி நியமனங்கள் தொடர்பாக இறுதி தீர்ப்பில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க நீதிமன்றம் சுதந்திரமாக செயல்படும் என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

முன்னதாக, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.எம். விஜயன், எதிர்காலத்தில் அந்த சேர்க்கைகளை மாற்றியமைப்பது கடினம் என்பதால், கல்வி நிறுவனங்களுக்கான உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் இருந்து மாநில அரசுக்கு தடை விதிக்குமாறு நீதிமன்றத்தை வலியுறுத்தினார். அரசு பணிகளில் நியமனங்கள் எதிர் மனுக்களின் முடிவுக்கு உட்பட்டதாக இருக்கலாம் என்றார்.

ஆனால், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் போன்ற சில கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையில் ஏற்கனவே, இந்த சட்டத்தை அமல்படுத்தியுள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் நீதிமன்றத்தில் தெரிவித்தார். எந்தவொரு இடைக்கால உத்தரவையும் வழங்குவதை அவர் எதிர்த்தார். முக்கிய எதிர் மனுக்களை வாதிடத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 10 5 per cent vanniyar reservation case hc interim order all admission appointment will be subject to final verdict

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com