கொளத்தூர் நகைக் கடை கொள்ளை வழக்கு தொடர்பாக நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகளை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
சென்னை கொளத்தூர் நகைக்கடையில் 3.5 கிலோ தங்கநகை கொள்ளை தொடர்பாக கொள்ளையன் நாதுராமைத் தேடி சென்னையை சேர்ந்த தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர். டிசம்பர் 12-ம் தேதி அதிகாலை நாதுராம் மற்றும் அவனின் கூட்டாளிகளை சுற்றிவளைத்து பிடிக்க முயன்ற போது, மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்.
இதைத் தொடர்ந்து, தீவிர கண்காணிப்பில் நாதுராம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பதுங்கி இருந்ததை செல்போன் டவர் மூலம் ராஜஸ்தான் போலீசார் கண்டுபிடித்தனர். உடனடியாக ராஜ்கோட்டுக்கு சென்ற போலீஸார் அவனை நெருங்கும் போது நாதுராம் தன் கையில் இருந்த துப்பாக்கியால் போலீஸாரை நோக்கி சுட்டுவிட்டு, காரில் ஏறி தப்பிச்சென்றான். இதையடுத்து நாதுராமின் காரை துரத்திச் சென்ற போலீஸார், காரை நோக்கி 3 ரவுண்டு சுட்டனர். இதனால் காரின் டயர் பஞ்சராகி நின்றது. இதையடுத்து, நாதுராம் மற்றும் உடனிருந்த கூட்டாளி சுரேஷ் மேகுவால் ஆகிய இருவரையும் போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
அதன்பின்னர், ராஜஸ்தான் கோர்ட் அனுமதி அளித்ததையடுத்து தமிழக போலீசாரிடம் நாதுராம் ஒப்படைக்கப்பட்டான். அவனை தனிப்படை போலீசார் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில், கொளத்தூர் கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டியிருப்பதால் நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று பரிசீலித்த நீதிமன்றம், கொள்ளை வழக்கு தொடர்பாக நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகள் தினேஷ், பக்தாராம் ஆகிய மூவரையும் 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது.
10 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்ட நிலையில், நாதுராம் உள்ளிட்ட 3 பேர் ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான நாதுராமின் தந்தை உட்பட நான்கு பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.