குஜராத் மாநிலம், போர்பந்தர் வனவிலங்கு பிரிவு மற்றும் இந்திய கடலோர காவல்படையினர் 22 டால்ஃபின் உடல்களைக் கண்டுபிடித்தனர். அவை காளை சுறாக்களுக்கு தூண்டிலில் பயன்படுத்தப்படுகிறது என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972-ஐ மீறி போர்பந்தர் கடற்கரையில் 22 பொதுவான டால்ஃபின்களை வேட்டையாடியதாகக் கூறி, தமிழ்நாடு விசைப்படகில் இருந்த பத்து மீனவர்களை குஜராத் வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
போர்பந்தர் வனவிலங்கு பிரிவு அதிகாரிகள் மற்றும் இந்திய கடலோர காவல்படையின் கூட்டு நடவடிக்கையில், புதன்கிழமை மாலை தமிழ்நாடு பதிவுசெய்யப்பட்ட தவானாஸ் 2 என்ற விசை படகை மறித்து சோதனை செய்ததில், படகில் 22 டால்ஃபின்களின் உடல்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
“தமிழ்நாட்டு மீன்பிடி படகில் இருந்த மீனவர்கள் குஜராத் கடற்கரையில் டால்ஃபின்களை வேட்டையாடுவதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, இந்திய கடலோர காவல்படையுடன் இணைந்து கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டோம். படகில் சோதனை செய்தபோது, படகின் ஐஸ் அறையில் 22 பொதுவான டால்ஃபின்களின் உடல்கள் இருப்பதைக் கண்டறிந்தோம். இதையடுத்து, படகு மற்றும் 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டு புதன்கிழமை இரவு போர்பந்தர் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அவர்கள் வியாழக்கிழமை முறைப்படி கைது செய்யப்பட்டனர்” என்று போர்பந்தர் துணை வனப் பாதுகாவலர் அக்னீஸ்வர் வியாஸ் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.

பொதுவான டால்ஃபின், உலகில் அதிக அளவில் காணப்படும் செட்டாசியன், 1972 சட்டத்தின் அட்டவணை 2-ல் பட்டியலிடப்பட்ட இனமாகும். எனவே இது இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட உயிரினமாகும். டால்ஃபின்களை வேட்டையாடிய வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.25,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
பிப்ரவரி 26 ஆம் தேதி கேரளாவில் உள்ள துறைமுகத்தில் இருந்து மீன்பிடி விசைப் படகு புறப்பட்டு சென்றதாக வியாஸ் கூறினார். “குற்றம் சாட்டப்பட்டவர்கள் காளை சுறாக்களுக்குத் தூண்டிலில் இறைச்சியைப் பயன்படுத்துவதற்காக பொதுவான டால்ஃபின்களை வேட்டையாடியதாகக் கூறுகிறார்கள். காளை சுறா இந்தியாவில் பாதுகாக்கப்படும் பட்டியலில் உள்ள விலங்கு அல்ல, அதன் வேட்டை அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், அவர்களின் கூற்றை நாங்கள் சரிபார்க்கிறோம்” என்று வியாஸ் கூறினார். போர்பந்தர் வனவிலங்கு பிரிவின் அதிகார வரம்பு கடற்கரையிலிருந்து 12 கடல் மைல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டால்ஃபின்களை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சன்சுமன் பாசுமாத்ரி (31), நிஹால் குனாஞ்சேரி (26), கில்தஸ் முப்பக்குடி (62), செல்வன் சுர்லஸ் (46), ராஜ் குமார் தனிஷராஜ் (52), ஆரூன் பிள்ளை (47), அந்தோணி பர்லா (50), மாயாதர் ராவுத் (50), ரஞ்சித் போரோ (28), சௌஜின் சூசை அருள்(36) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் சுர்லேஸ், தனிஷராஜ், பிள்ளை, பர்லா மற்றும் சூசை அருள் ஆகிய 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், இருவர்-பாசும்தாரி மற்றும் போரோ அசாமில் இருந்து வந்தவர்கள் என்றும் வன அதிகாரிகள் தெரிவித்தனர். குனாஞ்சேரி மற்றும் முப்பக்குட்டி கேரளாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் ராவுத் ஒடிசாவைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்தனர்.
இந்த படகு பர்லாவுக்கு சொந்தமானது என்றும், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோலாச்சில் பதிவு செய்யப்பட்ட படகு என்றும் வியாஸ் கூறினார். இந்த மீனவர்கள் கொச்சி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுள்ளனர்.
மீன்பிடி விசை படகில் 22 டால்ஃபின்களின் உடல்களைத் தவிர, நான்கு காளை சுறாக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக வியாஸ் கூறினார். “சில நேரங்களில், டால்ஃபின்கள் மீன்பிடி வலையில் சிக்கி, பிடிபடும். ஆனால், தமிழ்நாடு படகில் கண்டெடுக்கப்பட்ட டால்பின்கள் ஹார்பூன்கள் மூலம் வேட்டையாடப்பட்டதாகத் தோன்றுவதால் அவை பிடிபட்டதாகத் தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ஹார்பூன்களை மீட்டுள்ளோம். இது வேட்டையாடப்பட்டது என்பதை முதன்மையாக நிரூபிக்கிறது” என்று வனத் துறை அதிகாரி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“