10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அரசுக்கு சென்னை உயநீதிமன்றம் நோட்டீஸ்

சமூக, பொருளாதாரம் மற்றும் கல்வி ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கூடாது என அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளதா?

By: January 21, 2019, 4:59:17 PM

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தத்தை செல்லாது என்று அறிவிக்க கோரி தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கில் அடுத்த மாதம் 18 ஆம் தேதிக்குள் (பிப்ரவரி) பதில் அளிக்க மத்திய அரசுக்கு
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: ‘இந்தியாவில் வர்ணாசிரமத்தின்படி, பிராமணர்கள், சத்திரியர்கள், வைஸ்சியர், சூத்திரர் என்று மனிதர்களை அவர்கள் செய்யும் தொழிலின் அடிப்படையில் பிரித்தனர். இதில் எந்த பிரிவிலும் வராதவர்கள் பிற சாதியினர் என்று கூறி அவர்களை கீழ் சாதியினர் என்று அழைத்தனர்.

உயர் சாதியினர் என்று அழைக்கப்பட்டவர்கள், பொருளாதாரம், சமூக சுதந்திரத்தை முழுமையாக பெற்றனர். ஆனால், சூத்திரர்களுக்கும், பிறசாதியினருக்கும் அடிப்படை வசதிகள் கூட கிடையாது. உலகில் எங்கும் கேள்விப்படாத தீண்டாமை கொடுமை அவர்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்டது. அவர்கள் தொட்டால் மட்டுமல்ல, அவர்களது நிழல் கூட பட்டாலே தீட்டு எனப்பட்டது.

இவ்வாறு பல நூற்றாண்டுகளாக சமுதாய ரீதியாக கொடுமைகளை அனுபவித்து வந்தவர்களை சமுதாய மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக இடஒதுக்கீடு முறை இந்தியாவில் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த இடஒதுக்கீடு முறை மத்திய அரசுக்கு கொண்டு வருவதற்கு முன்பே, தமிழகத்தில் கொண்டு வரப்பட்டு விட்டது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவேண்டும் என்றும் 1921ஆம் ஆண்டு முதல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. முற்படுத்தப்பட்ட வகுப்பினரை சேராதவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கி 1922 ஆம் ஆண்டு மற்றொரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதுபோல பல அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.

இதில், கல்விக்கான இடஒதுக்கீடு தொடர்பான அரசாணையை எதிர்த்து செம்பகம் துரைராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அந்த அரசாணையை ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனால்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் 1951ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதன் மூலம், சாதி ரீதியான இடஒதுக்கீடு முறை கொண்டு அமல்படுத்தப்பட்டது. பிற மாநிலங்களில் எல்லாம் 50 சதவீதம் இடஒதுக்கீடு மட்டுமே வழங்க முடியும். ஆனால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில், 9 அட்டவணையில் திருத்தம் கொண்டு வந்து, தமிழகத்தில் மட்டும் 69 சதவீத இடஒதுக்கீடு முறை நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில், கல்வி, வேலை வாய்ப்புகளில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுககீடு வழங்கி அரசியல் அமைப்புச் சட்டத்தில் 103-வது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, எஸ்.சி, மற்றும் எஸ்.டி., பிரிவுகளை சேராத பொதுப்பிரிவினர்களில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இந்த 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி சாதி ரீதியான இடஒதுக்கீடு மட்டுமே வழங்க முடியுமே தவிர, பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு வழங்க முடியாது. அவ்வாறு வழங்கினால், அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடித்தளத்தையே மீறுவதாகும். பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டம் ஒன்று அல்ல.

அதுவும், இந்த சட்டத்திருத்தம் அவசர கதியில் கொண்டு வரப்பட்டள்ளது. மத்திய மந்திரி சபை கடந்த ஜனவரி 7 -ந்தேதி கூடி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்கிறது. மறுநாள் ஜனவரி 8-ந்தேதி நாடாளுமன்ற மக்களவையிலும், அதற்கு அடுத்தநாள் ஜனவரி 9-ந்தேதி மாநிலங்களவையிலும் இம்மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கு முன்பு எந்த ஒரு ஆய்வையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினர் யார்? என்பதை இந்த சட்டத்திருத்தத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு குறைவான வருமானத்தை பெறுபவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 97 சதவீதத்தினர் ஆண்டு 8 லட்சம் ரூபாய்க்கு குறைவான வருமானத்தை கொண்டிருப்பவர்கள். அப்படி பார்க்க போனால், இந்த இடஒதுக்கீடு யாருக்காக கொண்டு வரப்பட்டுள்ளது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளதை தெரிந்து இருந்தும், கூடுதலாக 10 சதவீத இடஒதுக்கீட்டை, மத்திய அரசு வழங்கியுள்ளது. எனவே, இந்த புதிய சட்டத்திருத்தத்துக்கு தடை விதிக்கவேண்டும். இந்த சட்டத்திருத்தத்தை செல்லாது. என்று அறிவிக்கவேண்டும்’ என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘இந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது, பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது சமத்துவ உரிமைக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் அறிவுத்தியுள்ளது. பொருளாதாரம் என்பது நிலையற்ற தன்மை கொண்ட நிலையில் அதனை அடிப்படையாக கொண்டு இட ஒதுக்கீடு வழங்க கூடாது’ வாதிட்டார்.

மேலும், ஆண்டுக்கு 8 லட்ச ரூபாய்க்கும் குறைவாக உள்ள பொது பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது என அமைச்சரவை கூட்டத்தில் கொள்கை முடிவாக எடுத்த நிலையில், அதற்கான சட்ட திருத்தத்தில் தொகை ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். நாடு முழுதும் 97 சதவிகிதத்தினர் ஆண்டுக்கு 8 லட்ச ரூபாய்க்கு குறைவான வருமானம் கொண்டவர்கள் இருக்கும் நிலையில், முன்னேறிய பிரிவினர்களுக்காகவே சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, சாதி ரீதியாக இட ஒதுக்கீடு மட்டுமே வழங்க முடியும். பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு வழங்குவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்பதால், முழுமையான ஆய்வு மேற்கொள்ளாமல் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, இட ஒதுக்கீடு வழங்கும்போது, சமூக, பொருளாதாரம் மற்றும் கல்வி ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கூடாது என அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு விளக்கமளித்த மூத்த வழக்கறிஞர் வில்சன், சமூக, பொருளாதார அல்லது கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கும்போது இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் எனவும், பொதுப்பிரிவினருக்கு கொடுக்க வேண்டுமென குறிப்பிடவில்லை எனவும் விளக்கமளித்தார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், மனுதாரரான ஆர்.எஸ்.பாரதி மாநிலங்களவை உறுப்பினர் என்ற முறையில், சட்ட திருத்ததிற்கு எதிராக வாக்களித்து, அங்கு வெற்றி பெற முடியாத நிலையில், நீதிமன்றத்தை அணுகி உள்ளதால் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என தெரிவித்தார்.

மேலும், இந்த சட்ட திருத்தத்தால் தனிப்பட்ட முறையில் மனுதாரர் பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் வழக்கு தொடரவில்லை என்றும், குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு எதிரான கொள்கையுடைய கட்சியிலிருந்து தொடரப்பட்ட வழக்கில் பொது நல வழக்கு இல்லை என்றும், அரசியல் நோக்கிற்காகவும், அரசியல் ஆதாயத்திற்கும் நீதிமன்றத்தை பயன்படுத்துவதாகவும், எனவே இந்த மனுவை நீதிமன்றம் அனுமதிக்க கூடாது என வாதிட்டார்.

மேலும் குற்றச்சாட்டை முன்வைத்து, அதனடிப்படையில் இந்த வழக்கை விசாரணைக்கு உகந்ததல்ல என ஆரம்பகட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டுமென வாதிட்டார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இட ஒதுக்கீடு பொதுப்பிரிவினருக்குதானே தவிர, முன்னேறிய வகுப்பினருக்கானது என சொல்லக்கூடாது என தெரிவித்தார். மேலும், இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநில அரசுகள் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும், அப்படி முடிவெடுக்காத தற்போதைய நிலையில் இந்த வழக்கு தேவையற்றது என தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் தவிர மீதம் இருப்பது முன்னேறிய பிரிவினர்தானே, அதை நீங்கள் பொதுபிரிவு என்கிறீர்கள், மனுதாரர் முன்னேறிய வகுப்பினர் என சுட்டிக்காட்டுகின்றனர், இதில் என்ன தவறு உள்ளது என மத்திய அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், மனு தொடர்பாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறையும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையும் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 18 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:10 percent reservation for ews dmk writ petition

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X