10 ரூபாய் நாணயங்களை பெற மறுப்பதாக பொது நல வழக்கு!

10 ரூபாய் நாணயங்கள் பெற மறுப்பதாக கூறி பொது நல வழக்கு

சென்னை தவிர பிற மாவட்டங்களில் கடைகளில் 10 ரூபாய் நாணயங்கள் பெற மறுப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த பழனி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், திருத்தணி பேருந்து நிலையத்தில் உள்ள கடையில் தேனீர் அருந்தி விட்டு 10 ரூபாய் நாணயத்தை வழங்கிய போது, அதை பெற கடை உரிமையாளர் மறுத்து விட்டார் எனத் தெரிவித்துள்ளார். இதேபோல பிற மாவட்டங்களிலும் 10 ரூபாய் நாணயங்களைப் பெற கடை உரிமையாளர்கள் மறுத்துள்ளதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பத்து ரூபாய் நாணயங்கள் செல்லத்தக்கது தான். அவற்றை பெற்று கொள்ள வேண்டும் என கடைகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாணயத்தை பெற மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியானவை, அவற்றை பெற வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிக்கைகளில் அறிவிப்பு வெளியிட ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் வரும் 23ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

×Close
×Close