10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் வாசு. மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். 57 வயதான இவர், வில்லிவாக்கத்தை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு நான்கு மாதங்களுக்கும் மேலாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
நேற்று இரவு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தனியாக அழைத்துச் சென்று தவறாக நடக்க முற்பட்டிருக்கிறார். அப்போது அந்த சிறுமி கதறி அழுதுள்ளார். அந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த சிறுமியை காப்பாற்றினர். அங்கிருந்து தப்பித்து ஓட முற்பட்ட காவலரை பொது மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : தர்மடி கொடுத்த பொதுமக்கள்
கையும் களவுமாக பிடிப்பட்ட அவருக்கு தர்மடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் பொதுமக்கள். அந்த சிறுமியிடம் இது தொடர்பாக கேட்ட போது நான்கு மாதமாக தன்னை துன்புறுத்தி வருவதாக அவர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததால் காவல் உதவி ஆய்வாளர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் மகளிர் காவல்துறையினர்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும், இந்த செயலில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க : போக்ஸோ சட்டம் என்றால் என்ன ?