தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15-ம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 11-ம் வகுப்பு விடுபட்ட தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது என்றும் 10,11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15-ம் தேதி முதல் ஜூன் 25 வரையிலும், அதே போல 11-ம் வகுப்புக்கான விடுபட்ட தேர்வுகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதல்வர் பழனிசாமி கொரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அறிவித்துள்ளார். அதே போல, 11-ம் வகுப்புக்கான விடுபட்ட தேர்வுகளையும் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், 10,11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
இது குறித்து முதல்வர் பழனிசாமி அறிவித்ததாவது: “2019-2020 கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் 11-ம் வகுப்பில் தேர்வு நடத்தாமல் விடுபட்டுப்போன, வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் புதிய பாடத்திட்டம், வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், தொழிற்கல்வி, கணக்குப் பதிவியல், பழைய பாடத்திட்டம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் ஜூன் 15-ம் தேதி முதல் ஜூன் 25 வரை தேர்வு நடத்த அரசு ஏற்கெனவெ ஆணைப் பிறப்பித்தது. அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றமும் தற்போது கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில் தேர்வை தள்ளிவைப்பது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து அரசு விரிவாக ஆய்வு செய்து, தற்போதுள்ள நிலையில், கொரோனா தொற்று சென்னையிலும் சில மாவட்டங்களிலும், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்று வல்லுனர்கள் நோய்த்தொற்று தற்போது குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என்று என்று தெரிவித்துள்ளனர். எனவே பெற்றோர்களின் கோரிக்கைகளையும் நோய்த்தொற்றின் தற்போதைய போக்குகளையும் கருத்தில் கொண்டு மாணவர்களை நோய்த்தொற்றில் இருந்து காக்க வருகின்ற ஜூன் 15ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளும், 11-ம் வகுப்புக்கான விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. எனவே இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும் மாணவர்களின் வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வைப் பொறுத்தவரை ஏற்கெனவே தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடத்தப்படவிருந்த மறுதேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. சூழ்நிலைக்கு ஏற்ப, 12-ம் வகுப்புக்கான மறுதேர்வு நாள் பின்னர் அறிவிக்கப்படும்.” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.