10th public exam cases : பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்து பிறப்பித்த அரசாணையை தமிழக அரசு தாக்கல் செய்ததை அடுத்து, தேர்வை தள்ளிவைக்கக் கோரிய அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ஜூன் 15ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தொற்று பரவல் குறையாததால், தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்கக் கோரி, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், இந்திய மாணவர் சங்க நிர்வாகி மாரியப்பன், ஈரோட்டைச் சேர்ந்த மாணவியின் தந்தை மாரசாமி, கடலூரைச் சேர்ந்த இளங்கீரன், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் பக்தவச்சலம் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அடுத்த இலவச அறிவிப்பு மாஸ்க்!
இதில், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு, 9 லட்சம் மாணவர்கள், 2 லட்சம் ஆசிரியர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், தேர்வை ஜூலை மாதத்துக்கு தள்ளிவைப்பது குறித்து பரிசீலிக்கும்படி கூறி, விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்திருந்தது.
இன்று, பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை, தமிழக அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்கக் கோரிய வழக்குகளை முடித்து உத்தரவிட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil