11 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : திமுக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

11 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி செய்த வழக்கில், திமுக கொறடா சக்கரபாணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி செய்த வழக்கில், திமுக கொறடா சக்கரபாணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

ஜெயலலிதா இறந்த பின்னர், 2017ம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றார். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபையில் நடந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

இந்நிலையில் திமுக கொறடா சக்கரபாணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ‘அரசு கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்’ என் கேட்டிருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி குத்தூஸ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. கடந்த ஏப்ரல் 27ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில், திமுக கொறடா மேல்முறையீடு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

×Close
×Close