திருச்சி மாவட்டத்தில் உள்ள விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் கீழ்க்கண்ட 11 கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யத் தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் கீழ்க்கண்ட 11 கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பேட்டு பார்டருடன் கூடிய சேலை, வேட்டி, துண்டு மற்றும் அங்கவஸ்திரம், லுங்கி, போர்வை, படுக்கை விரிப்பு, அலங்கார துணி, ஜமக்காளம், உடை துணி, கம்பளி, சால்வை, உல்லன் ட்வீட் மற்றும் சத்தார்க் ஆகிய 11 ரகங்கள் விசைத்தறியில் உற்பத்தி செய்யக்கூடாது என கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.
கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்துக்குப் புறம்பாக ஜவுளி ரகங்கள் மலிவு விலையில் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் கைத்தறி நெசவாளர்கள் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985-ஐ அமல்படுத்தி கைத்தறி துறையால் தற்போது பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பறக்கும் படையினர் மாவட்டத்தில் உள்ள விசைத்தறி கூடங்கள், தனியார் ஜவுளி விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆய்வின் போது சட்டத்துக்குப் புறம்பாக ஜவுளி ரகங்கள் உற்பத்தியில் ஈடுபடுதல் அல்லது விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளை கண்டறியும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது காவல்துறையில் புகார் அளித்து வழக்குப் பதிவு செய்யப்படும்.
மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உதவி அமலாக்க அலுவலகம் (கைப்பேசி எண் - 94434-75307) தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம் என ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“