scorecardresearch

மத்திய அரசு வேலை தருவதாக கூறி ரூ. 11 லட்சம் மோசடி: கோவையைச் சேர்ந்தவர் மீது வழக்குப் பதிவு

மத்திய அரசு வேலை தருவதாக கூறி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

coimbatore

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவருக்கு இவரது நண்பர் மூலம் சில வருடங்களுக்கு முன் கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த பிரசாந்த் உத்தமன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் பிரசாந்த் உத்தமன், ராஜேஷ்குமாரிடம் கோவை NSR சாலையில் உள்ள மத்திய அரசின் ஹிந்துஸ்தான் ஸ்கவுட் அண்ட் கைட்ஸில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 11,50,000 பெற்றுக் கொண்டு பணி ஆணையை வழங்கியுள்ளார்.

அதனைக் கொண்டு பணியில் சேரச் சென்ற போது, அது போலியான பணி ஆணை என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜேஷ்குமார் பணத்தை திருப்பி தரும்படி பிரசாந்த் உத்தமனிடம் பலமுறை கேட்டுள்ளார்.
ஆனால் இதுவரை பணத்தை திருப்பி அளிக்காத நிலையில் இது குறித்து ராஜேஷ்குமார் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பிரசாந்த் உத்தமன் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே பிரசாந்த் உத்தமன் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்ற கார் மெக்கானிக் ஒருவரிடம் இதே வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 9 லட்சத்தை வாங்கிக் கொண்டு போலியான பணி ஆணையை வழங்கி மோசடியில் ஈடுபட்டதாக அதே சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: 11 lakh rupees cheated complaint filed against coimbatore person