சிவகங்கை மாவட்டத்தில் 11 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மானாமதுரையில் கடந்த மாதம் 13-ஆம் தேதி மாணவரை வெட்டிய வழக்கில் வினோத் குமார் (20), ஆதீஸ்வரன் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி பூக்கடை வியாபாரி வெங்கடேஸ்வரனை வெட்டிக் கொன்றதாக பாலமுருகன் (28), அஜித் (31), பாலமுருகன் என்ற சமயமுத்து (23), கருப்பசாமி (32), கணேசன் (22), பால்பாண்டி (20), ரமேஷ்பாபு (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இது தவிர போக்சோ வழக்கில் சசி வர்ணம் (38) மற்றும் காரைக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட காளிமுத்து (28) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பரிந்துரை செய்தார். அதன்பேரில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து இவர்கள் அனைவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.