திருமங்கலம் அருகே உள்ள பெரிய ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் மருதுபாண்டி (39). விவசாயியான இவரது மனைவி இருளாயி. இத்தம்பதிக்கு கருப்பு வாண்டையார் (11) எனும் மகன் உள்ளார். பெருங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், இருளாயி தனது தாய் பழனியம்மாள், மகன் கருப்பு வாண்டையாரோடு பொள்ளாச்சி சென்று விட்டு பாலக்காடு திருச்செந்துார் ரயிலில் திருமங்கலத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்துள்ளார்.
அப்போது, திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு காலை 11 மணியளவில் ரயில் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, பயணிகள் அனைவரும் இறங்கியுள்ளனர். அப்போது, சிறுவன் கருப்பு வாண்டையாரும் ரயிலில் இருந்து இறங்க முயன்றுள்ளார். அப்போது, திடீரென ரயில் கிளம்பியதால் கருப்பு வாண்டையார் தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.
இதில், ரயில் சக்கரத்தில் சிறுவனின் வலது கால் சிக்கிய நிலையில், அங்கிருந்த பயணிகள் பதறிப்போய் கூச்சலிட்டனர். இதையடுத்து, ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர், ரயிலின் சக்கரத்தில் இருந்து சிறுவன் மீட்கப்பட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுவனின் கால் ரயிலின் சக்கரத்தில் சிக்கியதால் மிகவும் சேதமடைந்தது. இதைத்தொடர்ந்து, அறுவை சிகிச்சையின் மூலமாக மருத்துவர்கள் சிறுவனின் வலது காலை அகற்றினர். இந்த விபத்து தொடர்பாக மதுரை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயின் கண் முன்னே சிறுவனின் கால் ரயிலின் சக்கரத்தில் சிக்கி துண்டான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“