ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை 12 கப்பல்கள், 2 விமானங்கள், 2 ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். குமரி மாவட்ட நிவாரண பணிக்காக ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் மாவட்டம் ஓமலூரில் நிருபர்களை சந்தித்த முதலவர் எடப்பாடி க.பழனிச்சாமி கூறியதாவது:
ஓகி புயலால் பாதிப்புகள் குற்றித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று என்னை தொடர்பு கொண்டு பேசினார். புயல், மழை வெள்ள சேதங்கள் குறித்து விவாதித்தார். இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க்கும் என்னோடு போனில் பேசினார். புயல் பாதிப்பு தொடர்பான நிவாரண பணிகளில் மாநில அரசோடு இணைந்து மத்திய அரசும் செயல்படும் என்று சொன்னார். மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து காணாமல் போன மீனவர்களை தேடி வருகிறோம்.
கடலோர கப்பல்படை கப்பல்கள் 6ம், கப்பல் படை கப்பல்கள் 6ம், ஆக மொத்தம் 12 கப்பல்கள் மூலம் மீனவர்களை தேடி வருகிறோம். அதோடு, இரண்டு விமானங்கள் 2 ஹெலிகாப்டர்கள் மூலமும் 24 மணி நேரமும் தேடுதல் பணி நடந்து வருகிறது. அது மட்டுமல்லாது மீன் வளத்துறை, வருவாய்த்துறை என இரண்டு துறைகளும் சேர்ந்து, கிராமங்களில் சென்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வீடு திரும்பாத மீனவர்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து வருகிறார்கள். கணக்கெடுப்பு முழுமையடையவில்லை.
ஆங்காங்கே கடலில் தத்தளித்து வரும் மீனவர்களை கப்பல் படையினரும் ஹெலிகாப்டர் மூலமும் மீட்டு வருகின்றனர்.
மூன்று அமைச்சர்கள் குமரி மாவட்டத்தில் மீட்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். புயல் வந்ததைக் கேள்விப்பட்டதும் மின் துறை அமைச்சர் தங்கமணியையும், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரையும் அனுப்பி வைத்தோம். இப்போது கூடுதலாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரையும் அனுப்பி வைத்துள்ளோம். மூன்று அமைச்சர்களும் அங்கேயே தங்கி முழு மூச்சுடன் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர்களுக்கு உதவியாக 4 ஐஏஎஸ் அதிகாரிகளையும் அனுப்பி வைத்துள்ளோம்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி அனுப்பி வைத்துள்ளோம். மக்களுக்குத் தேவையான உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அங்கேயே மருத்துவ குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புயலின் காரணமாக 3750 மின் கம்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்துள்ளோம். அதனை சரி செய்வதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை அனுப்பி வைத்துள்ளோம். அந்த பணிகளை மேற்பார்வை செய்ய, தலைமை பொறியாளரையும் அனுப்பி வைத்துள்ளோம். மின் கம்பங்கள் எல்லாம் விரைவில் சரி செய்யப்பட்டு, எல்லா கிராமங்களுக்கும் மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்வோம். அரசை பொறுத்தவரையில் மிக வேகமாக, அவசரமாக, துரிதமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவோம்.
இதுவரையில் மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இன்னும் புயல் வரும் என்று சொல்லியிருக்கிறார்கள். முதல் கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க வேண்டும். அதன் பின்னர்தான், என்னென்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கணக்கிட வேண்டும். அதன் பின்னர்தான் புயல் நிவாரணத்து எவ்வளவு நிதி வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்க முடியும். மாநில அரசு முதல் கட்டமாக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளோம்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி க. பழனிச்சாமி தெரிவித்தார்.