தமிழகம் முழுவதும் கடந்த 25 ஆண்டுகளில் 1204 சிலைகள் திருடு போனதாகவும், அதில் 56 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு, 18 சிலைகள் மீண்டும் சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இந்து சமய அறநிலைய துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் குழு விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் படி இந்த வழக்கு பொன்.மாணிக்கவேல் விசாரித்து வருகின்றார். அந்த குழுவிற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர கோரிய வழக்கை வழக்கு நீதிபதி மகாதேவனிடம் நிலுவையில் உள்ளது.
அவ்வப்போது இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது கோவில்களில் சிலை கடத்தலை தடுக்க பல்வேறு உத்தரவுகளையும் நீதிபதி மகாதேவன் பிறப்பித்தார். இந்நிலையில் கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழகத்தில் கோவில்களில் உள்ள சிலைகள் கடத்தபடுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு மீண்டும் நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்த போது, இந்து சமய அறநிலைய துறை ஆணையர் ஜெயா நேரில் ஆஜராகி பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் கடந்த 1992 முதல் 2017 வரை 387 கோவில்களில் இருந்து 1204 சிலைகள் திருடப்பட்டுள்ளதாகவும், அவற்றில் இதுவரை 56 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கண்டுபிடிக்கபட்ட சிலைகளில் 18 ஐ சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்திடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 11 ஆயிரம் கோவில்களில் உள்ள சிலைகள், மற்றும் நகைகள் உள்ளிட்ட விலைமதிப்பற்ற அசையும் சொத்துக்களை பாதுகாக்க அலார வசதியுடன் கூடிய தனி அறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கோவில்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் தரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளதால், சக்தி வாய்ந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகத்திடம் கருத்துக்களை கோரியுள்ளதாகவும். கோவில் சிலைகளை திருடு போவதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதில் மனுவை ஏற்று கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் 29 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.