12th Standard Tamil Textbook Controversial Cover : தேர்தல் முடிந்து பாஜக ஆட்சிக்கு வருவதும், கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதும் ஒரே நேரத்தில் அமைந்துவிட புதுப்புது கொள்கை முடிவுகளால் பதட்டமான சூழ்நிலை அனைத்து பகுதிகளிலும் நிலவி வருகின்றது. சமீபத்தில் மும்மொழி கொள்கை மூலம் இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வரைவு திட்டம் ஒன்றை இணையத்தில் வெளியிட அது மிகப்பெரும் எதிர்ப்பு அலையை தமிழகத்தில் உருவாக்கியது.
இந்நிலையில் புதிதாக வந்திருக்கும் பாடத்திட்டங்களுக்கான புத்தகங்களிலும் பிரச்சனை கிளம்பியுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தமிழ் புத்தகத்தில் தமிழகத்தின் சிறப்புகள் எல்லாம் இடம்பெற்ற அட்டைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் அங்கும் சர்ச்சைகளை கிளப்பும் வகையில் கவிஞர் பாரதியாரின் புகைப்படத்தின் தலைப்பாகை காவி நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளது.
நம் நினைவிற்கு தெரிந்த வகையில், பாரதி என்றாலே கருப்பு நிற கோட்டும் வெள்ளை நிறத்தலைப்பாகையும் தான். ஆனால் புத்தகங்களில் காவி நிறம் அச்சிடப்பட்டுள்ளது மேலும் சர்ச்சைகளை கிளப்புவதாக அமைந்துள்ளது.
இந்த புத்தகத்தின் அட்டைப்படம் வெளியான உடனே, திமுக ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு “இந்த செய்கை பாரதியாருக்கு வேறு வடிவம் கொடுத்து, மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதாய் அமைகிறது” என்று கூறியுள்ளார்.
ஆனால் அதிமுக தரப்போ, திமுக கட்சி, பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் எதிரான மனநிலையை வளர்த்து வருவதால் என்ன நிகழ்ந்தாலும் அதை அரசியலாக்கி மக்கள் மத்தியில் தவறான பிம்பத்தை உருவாக்க நினைக்கின்றார்கள் என்று பதில் கூறுகிறது.
பாஜக தரப்போ பாரதியாருக்கு யாரும் புதுவண்ணம் தரத்தேவையில்லை. அவர் முன்பு எப்படி இருந்தாரோ அதையே வண்ணங்களாக உபயோகிக்கலாம். இதனை வடிவமைப்பாளர் கொஞ்சம் யோசித்து வடிவமைப்பை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளது.ஆனால் இந்த வடிவமைப்பிற்கும் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும் அதிருப்தியும் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : மும்மொழிக் கொள்கை திருத்தப்பட்ட வரைவிற்கு 2 உறுப்பினர்கள் எதிர்ப்பு! காரணம் என்ன?