ஒசூர் அடுத்த அஞ்செட்டி அருகே நேற்று காரில் கடத்தப்பட்ட 8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளான். சிறுவன் கடத்தப்பட்டது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த அஞ்செட்டி அருகே மாவனட்டி கிராமத்தைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் ரோஹித் நேற்று (02.07.2025) மாலை மாவனட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞரும், கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞரும் காரில் கடத்திச் சென்றதாக உறவினர்கள் கூறுகின்றனர். இதை அறிந்த பெற்றோர், புதன்கிழமை இரவு அஞ்செட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (03.07.2025) காலை சிறுவன் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். சிறுவனைக் கடத்திய இருவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலைக்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சிறுவன் கடத்தப்பட்டதாகப் புகார் அளித்தும் காவல்துறை உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.