சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் வகுப்பறையில் ஆசிரியர் திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான 13 வயது மாணவி பள்ளியின் முதல் மாடியில் இருந்து குதித்தததால் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் பள்ளி வகுப்பறையில், ஆசிரியை ஒருவர் திங்கள் கிழமை அன்று, பாடம் நடத்தும் போது மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை என்று பொதுவாக மாணவிகளை திட்டியுள்ளார். இதனால், வகுப்பில் இருந்த ஒரு மாணவி மன உளைச்சலுக்குள்ளாகி திடீரென வெளியே வந்து முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில், மாணவிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. காயம் அடைந்த அந்த மாணவி உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், அந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
பள்ளியில் ஆசிரியை திட்டியதால் மாடியில் இருந்து மாணவி குதித்தது தொடர்பாக போலீசார் கூறுகையில், குதித்தபோது பள்ளியில் இருந்த மாணவர்களும் பார்த்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து பள்ளிக்கு சென்று விசாரித்தோம். அந்த மாணவியின் பெற்றோர் பள்ளியின் மீது புகார் அளிக்க மறுத்துவிட்டனர் என்று தெரிவித்தனர்.
இதே போல, கடந்த ஆண்டு ஜூலை மாதம், சென்னையில் ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த மாணவி ஒருவர் முதல் மாடியில் இருந்து குதித்தார். இதில் அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இப்படி பள்ளியில் மாணவர்களை ஆசிரியர்கள் திட்டுவதால் இது போன்ற விபரீத செயல்களில் ஈடுபடுவது என்பது நடந்து வருகிறது, இது குறித்து மனநல மருத்துவர்கள் கூறுகையில், “ஒரு குழந்தையிடம் நடத்தையில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் ஒரு ஆசிரியர் அதன் பின்னணியில் உள்ள காரணத்தை அடையாளம் காண வேண்டும். மனநல பிரச்சினைகளின் அறிகுறிகள் மற்றும் வடிவங்களை அடையாளம் காண்பதில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். சீர்கேடான நடத்தைக்காக ஒரு குழந்தையை திட்டுவதற்கு முன்பு, ஒரு ஆசிரியர் அத்தகைய நடத்தைக்கு பின்னால் உள்ள காரணத்தை பகுப்பாய்வு செய்யலாம். இந்த சிக்கல்களைச் சமாளிக்க மாணவர்களுக்கு உதவ கல்வி நிறுவனங்கள் உளவியல் ஆலோசனை திட்டங்களை வைத்திருக்க வேண்டும்.” என்று வலியுறுத்துகின்றனர்.