தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இயங்கிய 1300 டாஸ்மாக் மது கடைகள் மூடப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த 2017 ஏப்ரல் 1-ம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 3000 மதுக்கடைகள் மூடப்பட்டன. பின்னர் அந்தக் கடைகளை வேறு இடங்களுக்குத் தமிழக அரசு மாற்றியது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இந்த வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலையாக அறிவிக்காமல் திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது.
மேலும், தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றாமல் மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது எனவும் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடும் பணி நேற்று நடைபெற்றது. இதன்படி சென்னையில் மட்டும் சுமார் 150 கடைகள் மூடப்பட்டது. இவ்வாறு தமிழகத்தில் மொத்தம் 1300 கடைகள் மூடப்பட்டது.