/tamil-ie/media/media_files/uploads/2023/04/New-Project58.jpg)
Elephant
கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பாலமலை கோவனூர் செல்லும் வழியில் நடிகர் சத்யராஜின் சகோதரியின் பண்ணை வீடு உள்ளது. அங்கு உள்ள தண்ணீர் தொட்டியில் குட்டியானை நீர் அருந்தும் பொழுது உள்ளே தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை 4 மணி அளவில் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறை காவலர்கள் அந்தப் பகுதியை சோதனை செய்த பொழுது குட்டியானை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து நான்கு நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிவித்தனர். குட்டி யானையின் உடல் அழுகிய நிலையில் இருந்தது.
இதைத் தொடர்ந்து இன்று மாவட்ட வன அலுவலர், மாவட்ட வன மருத்துவர், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் மற்றும் வனத்துறை காவலர்கள் 30க்கும் மேற்பட்டோர் குட்டியானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 2 ஜே.சி.பி இயந்திரங்கள் கொண்டு தொட்டியை உடைத்து குட்டி யானையை வலையின் மூலம் மேலே எடுத்தனர். இதைத் தொடர்ந்து குட்டியானையை மருத்துவர்கள் அருகில் உள்ள வனப்பகுதியில் வைத்து உடற்கூராய்வு செய்து அங்கு புதைத்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/WhatsApp-Image-2023-04-12-at-13.12.08.jpeg)
கோவை மாவட்டம் ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் தற்போதைய கோடை வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் உணவு மற்றும் நீர் தேடி வருகின்றன.வனத்துறையினர் ஊருக்குள் வரும் விலங்குகளை வனத்திற்குள் விரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். சில சமயங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்களும் நடக்கின்றன. கடந்த ஒரு மாத காலத்தில் தமிழகம் முழுவதும் 14 யானைகள் மின்வேலியிலும், பல்வேறு காரணங்களினாலும் மர்மமான முறையிலும் உயிரிழந்துள்ளதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/WhatsApp-Image-2023-04-12-at-13.12.09.jpeg)
வன விலங்குகளை பாதுகாக்க தமிழக அரசும், வனத்துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.