scorecardresearch

10-க்கும் மேற்பட்ட ஆப் உருவாக்கிய கோவை சிறுவன்: வீடு தேடி வந்த உலக சாதனை விருது

கோவையை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவன் பிரபல சமூக வலைதள பக்கங்களை போல புதிய செயலிகளை உருவாக்கி கணினி துறையில் இளம் தொழில் முனைவோராக உருவாகி சாதனை படைத்துள்ளார்.

World's Youngest Entrepreneur award
World's Youngest Entrepreneur award

கோவை சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த தம்பதி ஹரி கிருஷ்ணன்- ராஜேஷ்வரி. இவர்களது மகன் பரத் கார்த்திக். 10-ம் வகுப்பு பயின்று வரும் பரத் தனது சிறு வயது முதலே கணினி துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதையறிந்த பெற்றோர் அவருக்கு லேப்டாப் உள்ளிட்ட கணினி சாதனங்களை வாங்கி கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தனது சொந்த முயற்சியில் பரத் செயலிகளை உருவாக்கத் தொடங்கினார். பரத் ட்ரோல் சாட், ட்ரோல் மீட், மை கீ, லம்போகார்ட், ட்ரோல் ரூம் உள்ளிட்ட செயலிகளை உருவாக்கி அந்த செயலிகளை கல்வி நிலையங்களிலும் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளார்.

தற்போது கோவையில் உள்ள சில கல்லூரிகளுக்கு அறிவுரையாளராக பணியாற்றி வரும் பரத், தனது செயலி குறித்து கூறுகையில், பள்ளிகளில் நடைபெறும் பாட வகுப்பு மற்றும் அது தொடர்பான தேர்வுகளில் மாணவ, மாணவிகளின் செயல்பாடுகளை
பெற்றோர்கள் நேரடியாக இந்த செயலிகள் வாயிலாக தெரிந்து கொள்ள முடியும் எனத் தெரிவித்தார். இளம் வயதான பரத் உருவாக்கிய செயலிகள் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பள்ளி பருவத்திலேயே 10க்கும் மேற்பட்ட செயலி மற்றும் வலை தளங்களை உருவாக்கிய சிறுவன் பரத்தின் திறமையை கண்ட நோபல் உலக சாதனை புத்தகம், அவருக்கு உலகின் இளம் தொழில் முனைவோர் எனும் சாதனை விருதை வழங்கி கௌரவித்துள்ளது. இதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை நோபல் உலக சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகு நாகராஜ் பரத்தின் இல்லத்திற்கே நேரடியாக சென்று வழங்கி கவுரவித்தார்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: 14 years old boy creates world record becomes youngest entrepreneur