கொல்கத்தாவின் ஷாலிமார்- சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (ஜுன் 2) சென்னை நோக்கி வந்த போது இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே தடம் புரண்டு கோர விபத்து ஏற்பட்டது. ரயில் தடம்புரண்டு மற்றொரு தண்டவாளத்தில் விழுந்த நிலையில் பெங்களூரில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்ற ரயில் தடம்புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து தேசிய மற்றும் மாநில மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். விடிய விடிய மீட்பு பணிகள் நடைபெற்து வருகிறது. ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணி நடைபெறுகிறது. இந்த கோர சம்பவத்தில் 233 பேர் உயிரிழந்தனர். 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் தமிழகத்தை சேர்ந்த 140 பேர் பயணம் செய்ததாக பேரிடர் மேலாண்மை இயக்குநர் ராமன் தெரிவித்தார். அவர் கூறுகையில், "விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் தமிழகத்தை சேர்ந்த 140 பேர் பயணம் செய்துள்ளனர். அவர்களை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டோம். இதில் 90 பேர் பாதுகாப்பாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 10-12 பேர் காயம் அடைந்துள்ளனர். 10-15 ரயிலில் பயணம் செய்ய வில்லை. சில பேரின் மொபைல் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இது முதல் கட்ட பணிகள் ஆகும்" என்றார்.
தொடர்ந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு படி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் தேர்வாணயக் குழு தலைவர் அர்ச்சனா பட்நாயக் உள்பட 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு ஒடிசா விரைந்தனர். மீட்பு பணிகள் மேற்கொள்வதற்கும், தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு உதவவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு சார்பில் அவசர கட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1070 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
94458 69843, 94458 69848 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு 044 2859 3990 என்ற எண், தமிழ்நாடு காவல்துறை சார்பில் 044 2844 7701 மற்றும் 044 2844 7703 ஆகிய கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் விபத்து காரணமாக பாலாசோர் வழியாக வரும் 38 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 40க்கும் மேற்பட்ட ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“