நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தமிழகம் முழுவதும் தமிழக அரசுப் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.
அதன்படி, இன்று முதல் (அக்.28) 3 நாட்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சென்னையில் 11,176 பேருந்துகள் உள்பட தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து மொத்தம் 14,086 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் இருந்து 700 சிறப்பு பேருந்துகளும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பிற முக்கிய பகுதிகளுக்கு 330 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிக்க இதுவரை 1.22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் பேருந்துகள் வாயிலாக 5 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கிளாம்பாக்கத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், திருச்சி, சிதம்பரம், மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்கள் இயக்கப்படும்.
கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தணி வழியாக செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும்.
மாதவரத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் வசதிக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரத்யேக உதவி எண்கள்: 7845700557, 7845727920, 7845740924. புகார் தெரிவிப்பதற்கான எண்கள்: அரசு பேருந்துகள்: 94450 14436 ஆம்னி பேருந்துகள்: 044-24749002, 26280445, 26281611.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“