அஸ்வினி மரணம்: அழகேசனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

அழகேசனை 15 நாள் நீதிமன்றக் காவலில் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்

சென்னை மதுரவாயல் ஆலபாக்கம் தனலட்சுமிநகரை சேர்ந்த மோகன், சங்கரி ஆகியோரின் மகள் அஸ்வினி (19). மோகன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், தனது தாய் சங்கரியுடன் அஸ்வினி வசித்து வந்தார். கே.கே நகரில் உள்ள மீனாட்சி கலைக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார் அஸ்வினி. இவரது வீடு அருகே அழகேசன் (24) என்ற வாலிபர் வசித்து வந்தார். தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை செய்து வந்த அழகேசன், அஸ்வினியின் வீட்டிற்கு தண்ணீர் சப்ளை செய்ய சென்றபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

இந்த காதலுக்கு அஸ்வினி வீட்டார் எதிர்ப்புத் தெரிவிக்க, ஒருநாள் திடீரென அஸ்வினி வீட்டிற்குள் வந்து அவரை கட்டாயப்படுத்தி அழகேசன் தாலி கட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து அழகேசன் மீது புகார் அளிக்க, காவல்துறை அவரை உள்ளே வைத்து நன்கு கவனித்து இருக்கிறது. இந்த ஆத்திரத்தில் இருந்த அழகேசன், நேற்று மாலை அஸ்வினி கல்லூரி முடிந்து வெளிவந்த போது, அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

பொதுமக்கள் அவரை பிடித்து அடித்து உதைத்து போலீசிடம் ஒப்படைத்தனர். அழகேசனை, கே.கே நகர் R7 காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரனை நடத்தினர். தொடர்ந்து, சைதாப்பேட்டை 18வது குற்றவியல் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் மோகனாவிடம் ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து, அழகேசனை 15 நாள் நீதிமன்றக் காவலில் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

×Close
×Close