நாகர்கோவிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த நாஞ்சில் முருகேசனை போலிசார் நெல்லையில் கைது செய்தனர்.
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன். இவர் 2011ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். கட்சியில் பல மாநில பொறுப்புகளை வகித்து வந்த இவர் கடந்த சட்டமன்றத் தொகுதியில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு நாஞ்சில் முருகேசன் அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் அணியில் சேர்ந்தார். பின்னர், மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/07/New-Project-2020-07-29T151342.861-217x300.jpg)
இந்த நிலையில்தான், நாகர்கோவில் கோட்டறைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படித்துவரும் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நாஞ்சில் முருகேசன் மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் நேற்று போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிறுமியின் தந்தை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடத்திச் சென்று விட்டதாக முதலில் அளித்த போலீஸ் புகாரில் கூறியிருந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடிவந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமியையும் அவரை அழைத்துச் சென்ற இளைஞரையும் மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து, போலீசார் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் உதவியுடன் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமி தன்னைக் கடந்த 4 ஆண்டுகளாக முக்கிய பிரமுகர்களுடன் தவறாஅன பாதைக்கு அழைத்துச் சென்றதாகவும் அதற்கு தனது தாய் மற்றும் உறவினர்களே உடந்தையாக இருந்ததாக திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
போலீசாரின் விசாரணையில், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலருடைய பெயரைக் கூறி, அவர்கள் தன்னை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், 2017-ம் ஆண்டு சிறுமியின் தாயார், முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசனிடம் அழைத்துச் சென்றபோது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வன்கொடுமை செய்ததாக அந்த சிறுமி போலீசாரிடம் அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளார்.
அதோடு, போலீசார் சிறுமியிடம் பெற்ற ரகசிய வாக்குமூலத்தில், நாஞ்சில் முருகேசன் தவிர ஒரு முதியவர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் என 3 பேர் தன்னை பல நாட்களாக மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கூறியுள்ளார்.
சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அதிமுக முன்னால் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் உள்ளிட்ட 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்வதற்காக தேடி வருகின்றனர்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு அவர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அதிமுக தலைமைக் கழகம், கட்சிக்கு கலங்கம் விளைவிப்பதாக நாஞ்சில் முருகேசனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியது.
நாகர்கோவில் புத்தேரியில் உள்ள நாஞ்சில் முருகேசனின் வீட்டை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறை தனிப்படை அமைத்து கைது செய்ய தெடியதால் நாஞ்சில் முருகேசன் தலைமறைவானார்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் நெல்லை மாவட்டம் உவரியில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கே சென்ற போலீசார் உவரியில் நாஞ்சில் முருகேசனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேலும், போலீசாரிடம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்தவர்களையும் அவர்களின் வீடுகளையும் அடையாளம் காட்டுவதாக தெரிவித்துள்ளார். இதனால், சிறுமி பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் பலரும் கலக்கத்தில் உள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"