நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, விநாயகர் கோவில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அந்தவகையில், திருச்சியின் அடையாளமாக விளங்கும் மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலின் மலைமேல் அமர்ந்துள்ள உச்சிப் பிள்ளையாருக்கு விநாயகர் சதுர்த்தி தினத்தில் இருந்து 14 நாட்கள் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி, திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (18.09.2023) துவங்கி (01.10.2023) முடிய சிறப்பாக நடைபெற உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மலைக்கோட்டை வாசலில் வீற்றிருக்கும் மாணிக்க விநாயகருக்கும், மலை உச்சியில் இருக்கும் விநாயகருக்கும் இன்று காலை 150 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான கொழுக்கட்டை படைக்கப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/LFfwqA79zZ1CxIUGNmEM.jpeg)
மாணிக்க விநாயகர் சன்னதியில் 75 கிலோவும், மலை உச்சியில் உள்ள விநாயகர் சன்னதியில் 75 கிலோ வீதம் 150 கிலோ எடையில் கொழுக்கட்டை செய்யப்பட்டு நிவேத்தியம் செய்யப்பட்டது. இந்த கொழுக்கட்டை பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள்ளு, நெய், தேங்காய் ஆகிய பொருட்களைக் கொண்டு திருக்கோயில் மடப்பள்ளியில் கடந்த இரண்டு நாட்களாக தயாரிக்கப்பட்டது. படையல் இட்ட பிறகு கொழுக்கட்டை பிரசாதங்களாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இன்று தொடங்கி 14-தினங்கள் நடைபெறும் விழாவில் உச்சிப் பிள்ளையார், மாணிக்க விநாயகர் சன்னதி மூலவருக்கு தினந்தோறும் சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும். மாலை நேரங்களில் பக்தி இன்னிசை நிகழ்ச்சி, நாட்டிய நிகழ்ச்சி, ஆன்மீக சொற்பொழிவு போன்ற கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் மாலை 4:00 மணிக்கு பாலகணபதி, நாகாபரண கணபதி, லெஷ்மி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜகணபதி, மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாரூடர் கணபதி, சித்திபுத்தி கணபதி மற்றும் நர்த்தன கணபதி ஆகிய பல்வேறு விஷேச அலங்காரங்களில் உற்சவர் பக்தர்களுக்கு காட்சி தருவார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மலைக்கோட்டை கோயில் உதவி ஆணையர் ஹரிஹர சுப்பிரமணியன் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர். மலைக்கோட்டை கோயிலில், கடந்த 2004-ம் ஆண்டு முதல் 150 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கொழுக்கட்டை தயார் செய்து படையலிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“