தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்தவகையில் கோவையில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நீலாம்பூர் பகுதியில் போதை தரக்கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்டுகளை வைத்திருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த சங்கர் திலீப் குமார் (38) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.10 லட்சத்து 81ஆயிரத்து 600 ரூபாய் மதிப்புள்ள கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கஞ்சா சாக்லேட்டுகள் தொடர்பான ரகசிய தகவல் கிடைத்ததும் விரைந்து செயல்பட்டு சாக்லேட்டுகளை பறிமுதல் செய்த தனிப்படை காவல் துறையினரை நடவடிக்கையை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை