கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பிள்ளையார்குப்பம் கிராமத்தில் அரசு மருத்துவர் வீட்டில் 158 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து கடலூர் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை சம்பவம் எப்படி நடந்தது?
புதுப்பிள்ளையார்குப்பத்தைச் சேர்ந்தவர் காசிலிங்கம் (65). மணிலா வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் ராஜா (44), விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிகிறார். மருத்துவர் ராஜா, தனது மகள் படிப்புக்காக விழுப்புரத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கி வசித்து வருகிறார்.
புதுப்பிள்ளையார்குப்பத்தில் உள்ள சொந்த வீட்டில், கீழ்த் தளத்தில் மருத்துவர் ராஜாவின் பெற்றோர்கள் வசித்து வந்தனர். மேல் தளம் பூட்டப்பட்டிருந்தது. கடந்த முன்தினம் மாலை, ராஜாவின் தந்தை காசிலிங்கம் மேல் தளத்திற்குச் சென்று மின்விளக்குகளைப் போட்டுவிட்டு வந்தார். பின்னர், நேற்று காலை மின்விளக்குகளை அணைப்பதற்காக மாடிக்குச் சென்றபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக தனது மகன் மருத்துவருக்குத் தகவல் தெரிவித்தார். வீட்டுக் கொள்ளை குறித்து காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
காடாம்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வீட்டில் இருந்த 158 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. கொள்ளை சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார் மற்றும் பண்ருட்டி டி.எஸ்.பி. ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
காவல்துறையின் தீவிர விசாரணை:
கடலூரிலிருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்திலிருந்து மோப்பம் பிடித்துக்கொண்டு, பண்ருட்டி சென்னை சாலை பணிக்கன்குப்பம் செயின்பால் பப்ளிக் பள்ளி வரை ஓடி வந்தது. ஆனால், யாரையும் அடையாளம் காட்டவில்லை. மேலும், கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
அரசு மருத்துவர் வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, குற்றவாளிகளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் புதுப்பிள்ளையார்குப்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.