கர்நாடகா மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு அன்மோல் ஜூவல்லரி என்ற மொத்த தங்க நகை விற்பனை கடை இயங்கி வருகிறது. 25 வருடங்களாக இயங்கி வரும் இந்த கடை தமிழகத்தில் கோவை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருக்கும் நகைக் கடைகளிலிருந்து ஆர்டர் பெற்று, தங்க நகைகளை தயாரித்து மொத்த விலையில் விற்பனை செய்து வருகிறது.
இந்தக் கடையில் மார்கெட்டிங் பிரிவு மேலாளராக ராஜஸ்தானைச் சேர்ந்த அனுமன் துவேசி பணியாற்றி வந்தார். இவர் கோவை கடைகளில் இருந்து பெற்ற ஆர்டர்களுக்கு பெங்களூரில் இருந்து நகைகளை பத்திரமாக கொண்டு வந்து இங்குள்ள கடைகளுக்கு ஒப்படைத்து அதற்கான ரசீது பெற்று பெங்களூருக்கு பணப் பரிவர்த்தனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பெங்களூரில் தயாரிக்கப்படும் நகைகளை பத்திரமாக கொண்டு வந்து ஆர்டர்கள் பெறப்பட்ட நகை கடைகளில் ஒப்படைத்து பணப் பரிவர்த்தனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் செப்டம்பர் 12ஆம் தேதி வரை பெங்களூரிலிருந்து கோயம்புத்தூருக்கு 13.5 கிலோ தங்க நகைகளை விநியோகம் செய்ய கொண்டு வந்துள்ளார். ஆர்டர்கள் தந்த நகை கடைகளுக்கு நகைகளை விநியோகம் செய்யாமல் இருந்தாக தெரிகிறது.
நகைக்கடை உரிமையாளர் சக்னால் காட்ரி விநியோகம் செய்யப்பட்ட நகைகளுக்கான பண பரிவர்த்தனை இன்னும் வரவில்லை என்பதை அறிந்து இதுகுறித்து அனுமன் துவேசியிடம் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால் துவேசி முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் சந்தேகம் அடைந்த காட்ரி, அனுமன் துவேசி மீது கோவை வெரைட்டி ஹால் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், 13.5 கிலோ எடையுள்ள 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கையாடல் செய்யப்பட்டிருப்பதாக வெரைட்டி ஹால் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் ஆய்வாளர் பாண்டியம்மாள் தலைமையில் தனிப்படை அமைத்து நகை கையாடல் குறித்து புலன் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் அடிப்படையில் நகைக்கடை ஊழியர் அனுமன் துவேசி தனிப்படை போலீசாரல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரிடமிருந்து நகைகள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. இந்தநிலையில் வழக்கு தொடர்பாக கடையின் முன்னாள் ஊழியர் தல்பத் சிங் என்ற நபரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். நகை கையாடல் நடந்தது திட்டமிட்ட சதியா? எப்படி நடந்திருக்கக்கூடும்? என்பது குறித்து அடித்தடுத்த விசாரணையில் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“