சென்னை, மாதவரத்தில் 16 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 21-ஆம் தேதி ரோஜா நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் திருவல்லிக்கேணியை சேர்ந்த கார்த்திக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட போது அவர்களிடமிருந்து சுமார் 1.5 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக, அருப்புக்கோட்டையில் ஆய்வகம் அமைத்து போதைப்பொருள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலபொருட்களை வாங்கி வந்து அவற்றை ஆய்வு கூடத்தில் வைத்து தயாரித்தது தெரிய வந்துள்ளது. இதனடிப்படையில், அருப்புக்கோட்டையை சேர்ந்த முருகன் மற்றும் லட்சுமி நரசிம்மன் ஆகியோரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, டெல்லி, ஹரியானா, மணிப்பூரில் முகாமிட்ட மாதவரம் தனிப்படை போலீசார், போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்தனர். போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட வெங்கடேசனை போலீசார் முதலில் கைது செய்த நிலையில், அவரது மனைவி ஜான்சியையும் கைது செய்துள்ளனர்.
தற்போது வரை சுமார் 17.8 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஹரியானா, டெல்லி, மணிப்பூர் ஆகிய இடங்களில் தனிப்படை போலீசார் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.